வெஸ்ட் இண்டீஸ் பெண்கள் வெற்றி

சார்ஜா: வங்கதேசத்துக்கு எதிரான 'டி-20' உலக கோப்பை லீக் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் பெண்கள் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஐக்கிய அரபு எமிரேட்சில் (யு.ஏ.இ.,) பெண்களுக்கான ஐ.சி.சி., 'டி-20' உலக கோப்பை 9வது சீசன் நடக்கிறது. சார்ஜாவில் நடந்த 'பி' பிரிவு லீக் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ், வங்கதேசம் அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி 'பீல்டிங்' தேர்வு செய்தது.

வங்கதேச அணிக்கு கரிஷ்மா ராம்ஹரக் தொல்லை தந்தார். இவரது 'சுழலில்' ஷதி ராணி (9), திலாரா அக்தர் (19), சோபனா (16) சிக்கினர். கேப்டன் நிகர் சுல்தானா (39) நம்பிக்கை தந்தார். வங்கதேச அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 103 ரன் எடுத்தது. வெஸ்ட் இண்டீஸ் சார்பில் கரிஷ்மா 4, அபி பிளட்சர் 2 விக்கெட் சாய்த்தனர்.

சுலப இலக்கை விரட்டிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு கேப்டன் ஹேலி மாத்யூஸ் (34), ஸ்டெபானி டெய்லர் (27) நல்ல துவக்கம் கொடுத்தனர். ஷெமைன் (21) நம்பிக்கை தந்தார். ரபேயா கான் வீசிய 13வது ஓவரில் 2 சிக்சர் விளாசிய டீன்டிரா டாட்டின் வெற்றியை உறுதி செய்தார். வெஸ்ட் இண்டீஸ் அணி 12.5 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 104 ரன் எடுத்து வெற்றி பெற்றது. டாட்டின் (19), சினெல்லே ஹென்றி (2) அவுட்டாகாமல் இருந்தனர்.

மூன்று போட்டியில் 2 வெற்றி, ஒரு தோல்வி என 4 புள்ளிகளுடன் வெஸ்ட் இண்டீஸ் அணி 'பி' பிரிவில் முதலிடத்துக்கு முன்னேறியது. அடுத்த இரு இடங்களில் தென் ஆப்ரிக்கா (4 புள்ளி), இங்கிலாந்து (4) அணிகள் உள்ளன.




2000 ரன்


பொறுப்பாக ஆடிய நிகர் சுல்தானா, சர்வதேச 'டி-20' போட்டியில் 2000 ரன் எட்டிய முதல் வங்கதேச வீராங்கனையானார். இதுவரை 102 போட்டியில், ஒரு சதம், 8 அரைசதம் உட்பட 2016 ரன் எடுத்துள்ளார். அடுத்த இடத்தில் பர்கானா (1253 ரன்) உள்ளார்.

Advertisement