நீர் மூலம் பரவும் நோய்களை தடுக்க குடிநீரில் குளோரினேற்றம் அவசியம்

மதுரை: 'மழைக்கால நோய்களை தடுக்க குடிநீரில் குளோரினேற்றம் செய்வது அவசியம்' என்கிறார் சுகாதார துணை இயக்குநர் குமரகுரு.

அவர் கூறியதாவது: தொடர் மழை பெய்வதால் டெங்கு வைரஸ் பரப்பும் கொசுக்களின் தாக்கம் ஒருவாரம் கழித்து தான் தெரியவரும். சில நாட்களாக பெய்யும் மழையால் ரோட்டில் மழைநீருடன் கொசுமுட்டைகளும் அடித்துச் செல்லப்பட்டிருக்கும். வீடுகளில் தேவைக்கு அதிகமாக தண்ணீரை வாரக்கணக்கில் பிடித்து வைக்க வேண்டாம். ஒருவாரத்திற்கு மேல் திறந்தநிலையில் உள்ள தண்ணீர் பாத்திரத்தில் டெங்கு கொசுக்கள் எளிதாக முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்யும். பாத்திரங்களை சுத்தமாக துலக்கினால் முட்டைகள் வெளியேற்றப்படும்.

மழைக்காலத்தில் மாநகராட்சி மூலம் வழங்கப்படும் குடிநீரில் குளோரினேற்றம் செய்ய வேண்டும். இதனால் வயிற்றுப்போக்கு, மஞ்சள்காமாலை, டைபாய்டு காய்ச்சலை தவிர்க்கலாம். குளோரினேற்றம் செய்யப்பட்ட தண்ணீரின் வாசனை டெங்கு கொசுக்கள் முட்டையிடுவதற்கான சூழலை உருவாக்காது. பாத்திரங்களில் பிடித்து வைத்த தண்ணீரில் டெங்கு வைரஸ் பரப்பும் கொசுக்கள் முட்டையிடாது.

வீட்டைச் சுற்றி தேங்காய் மட்டை, சிரட்டை, ரப்பர், பிளாஸ்டிக் கப், டம்ளர்கள் இருந்தால் அகற்ற வேண்டும். மழைநீர் தேங்காமல் வடிகால் வசதி செய்தால் டெங்கு கொசு உற்பத்தியை கட்டுப்படுத்தலாம். இந்தாண்டு டெங்கு காய்ச்சலின் தாக்கம் மதுரையில் குறைவு என்றார்.

Advertisement