ரேஷன் முறைகேடுக்கு ரூ. 3 லட்சம் அபராதம் பொருள் இருப்பு குறைவால் நடவடிக்கை

மதுரை: மேலுார் அருகே கச்சிராயன்பட்டி ரேஷன் கடையில் அதிகாரிகள் நடத்திய சோதனையில் பொருள் இருப்பு அளவு குறைந்ததால் விற்பனையாளருக்கு ரூ.3.11 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கச்சிராயன்பட்டியில் உள்ள ரேஷன் கடையில் முறைகேடு நடப்பதாக பொது வினியோகத்துறை அலுவலருககு பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதைத் தொடர்ந்து வட்ட வழங்கல் அலுவலர் கார்த்திக்பாபு தலைமையில் கூட்டுறவு சார்பதிவாளர் சீனியப்பா, செயலாளர் கணேசன், வருவாய் ஆய்வாளர் பொன்னையா ஆகியோர் அக்கடையில் கூட்டுத் தணிக்கை மேற்கொண்டனர்.

இதில் அங்குள்ள பி.எஸ்.ஓ., (பாயின்ட் ஆப் சேல்) கருவியில் விற்பனை செய்த அளவுக்கும், கடையில் இருந்த பொருட்களின் இருப்பு அளவுக்கும் பெரிய அளவில் வித்தியாசம் இருந்ததை கண்டறிந்தனர்.

அரிசி 5.392 டன், சர்க்கரை 336 கிலோ மற்றும் கோதுமை, துவரம்பருப்பு, மண்ணெண்ணெய், பாமாயில் உட்பட பல்வேறு பொருட்களின் அளவு இருப்பு குறைந்துள்ளது.இதையடுத்து விற்பனையாளர் ரவிக்கு ரூ.3.11 லட்சம் அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட வினியோக அலுவலருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

Advertisement