கூடுதல் போனஸ் கேட்கும் போக்குவரத்து தொழிலாளர்கள்

மதுரை: மதுரையில் அரசு போக்குவரத்து எச்.எம்.எஸ்., தொழிலாளர் சங்கம் சார்பில் மண்டல அவசர ஆலோசனைக் கூட்டம் நடந்தது. தலைவர் ரவி தலைமை வகித்தார். துணைத் தலைவர்கள் கண்ணன், ஒச்சாத்தேவன் முன்னிலை வகித்தனர்.

ஆலோசகர் அங்குசாமி வரவேற்றார். பொதுச் செயலாளர் ஷாஜகான் தீர்மானங்களை விளக்கிப் பேசியதாவது:

தமிழகத்தில் உள்ள 9 பொதுத்துறை நிறுவனங்களுக்கு 20 சதவீத போனஸ் அறிவித்துள்ள தமிழக அரசு, அதற்கான நிதி ஆதாரத்தை உறுதி செய்ய வேண்டும். அரசு போக்குவரத்து தொழிலாளர்களுக்கு போனஸ் 5 சதவீதம் கூடுதலாக வழங்க வேண்டும். தொழிலாளர் நலச்சட்டப்படி பண்டிகை கால முன்பணம் 30 நாட்களுக்கு முன் வழங்க வேண்டும்.

அதன்படி போக்குவரத்து தொழிலாளர்களுக்கு விலைவாசி உயர்வை கருத்தில் கொண்டு ரூ.20 ஆயிரம் பண்டிகை கால முன்பணமாக உடனடியாக வழங்க வேண்டும். 15வது ஊதிய ஒப்பந்தம் காலாவதியாகிவிட்ட நிலையில் மத்திய மாநில அரசுகள் பேரவை சங்கங்களை காலம் தாமதிக்காமல் அழைத்துப் பேச வேண்டும் என்றார். பொருளாளர் பாலகிருஷ்ணன் நன்றி கூறினார்.

Advertisement