கொஞ்சம் 'இயற்கையையும்' கவனிங்க...: மதுரை அரசு மருத்துவமனையில் வசதி இல்லாத மருத்துவப் பிரிவு

மதுரை: மதுரை அரசு மருத்துவமனையில் உள்ள சித்தா, யோகா மற்றும் இயற்கை நல்வாழ்வு பிரிவுக்கு கூடுதல் இடம் ஒதுக்க வேண்டும்.

மிகச்சிறிய மருந்து கொடுக்கும் அறை, சிறிய மருத்துவ பரிசோதனை அறையில் கழிப்பறை வசதியுடன் கூடிய 200 சதுரடி பரப்பளவில் சித்த மருத்துவப் பிரிவு செயல்படுகிறது. ஆங்கில மருத்துவ சிகிச்சை பெறும் நோயாளிகள் உட்பட தினமும் 100 நோயாளிகள் வரை சித்த மருத்துவ சிகிச்சை பெறுகின்றனர்.

நீண்ட வரிசையில் நின்றாலும் ஒருவர் உட்கார கூட உள்ளேயோ, காரிடாரிலோ வசதியில்லை. மருத்துவ அறையில் இருந்து ஒரு நோயாளி வெளியே வந்தால் தான் மற்றொரு நோயாளி உள்ளே செல்ல முடியும் என்ற அளவுக்கு இடநெருக்கடியாக உள்ளது.

சித்த மருத்துவத்துறையில் வர்மம், தொக்கனம் என ஏகப்பட்ட சிகிச்சை முறைகள் இருந்தாலும் எதையும் முறைப்படி செய்வதற்கான இடவசதியில்லை.

இதேபோல யோகா மற்றும் இயற்கை நல வார்டில் வெளிப்புற பதிவு சீட்டு அறை, டாக்டர் அறை, சிகிச்சை அளிக்கும் அறை மட்டுமே உள்ளது. இங்கு வரும் நோயாளிகளுக்கு மூலிகை எண்ணெய் மசாஜ், களிமண் சிகிச்சை, வாழையிலை சிகிச்சை, நீராவி சிகிச்சை என பல்வேறு சிகிச்சை அளிக்க ஆண், பெண் தெரபிஸ்ட்கள் தனியாக உள்ளனர்.

ஒவ்வொருவருக்கும் சிகிச்சை அளிக்க குறைந்தது 20 நிமிடங்களாகும். ஒரு சிறிய அறை மட்டுமே உள்ளதால் நோயாளிகள் மணிக்கணக்கில் சிகிச்சைக்காக காத்திருக்கின்றனர்.

இந்த வார்டையொட்டி சலைன் (குளுகோஸ் பாட்டில்கள்) வங்கி கட்டடம் உள்ளது. குளுகோஸ் பாட்டில்கள் இருப்பு வைக்கப்பட்டு வார்டுகளின் தேவைக்கேற்ப அனுப்பப்படுகிறது. பெரும்பாலான வார்டுகள் டீன் அலுவலகத்தை ஒட்டியுள்ளதால் சலைன் வங்கியை பழைய மகப்பேறு வார்டு பின்பகுதி காலியிடத்திற்கு மாற்றலாம்.

இந்த கட்டடத்தை யோகா வார்டுடன் நீட்டித்து கூடுதல் அறைகள் வசதிகளுடன் சித்த மருத்துவப் பிரிவையும் இங்கேயே நடத்த வேண்டும்.

Advertisement