ஜானிக் சின்னர் 'சாம்பியன்': ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிசில்

ஷாங்காய்: ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் ஒற்றையரில் இத்தாலியின் ஜானிக் சின்னர் கோப்பை வென்றார்.

சீனாவில், ஏ.டி.பி., ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் நடந்தது. இதன் ஒற்றையர் பிரிவு பைனலில் இத்தாலியின் ஜானிக் சின்னர், செர்பியாவின் நோவக் ஜோகோவிச் மோதினர். 'டை பிரேக்கர்' வரை சென்ற முதல் செட்டை 7-6 எனக் கைப்பற்றிய சின்னர், இரண்டாவது செட்டை 6-3 என தன்வசப்படுத்தினார். ஒரு மணி நேரம், 37 நிமிடம் நீடித்த போட்டியில் அசத்திய சின்னர் 7-6, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று, இத்தொடரில் முதன்முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

இது, சின்னர் கைப்பற்றிய 4வது மாஸ்டர்ஸ் பட்டம். ஏற்கனவே கனடா (2023), மயாமி (2024), சின்சினாட்டி (2024) ஓபனில் கோப்பை வென்றிருந்தார். நடப்பு ஆண்டில் ஆஸி., ஓபன், யு.எஸ்., ஓபன் உட்பட 7 பட்டம் வென்ற இவர், 8 ஆண்டுகளுக்கு பின் ஒரு சீசனில் அதிக கோப்பை வென்ற வீரரானார். கடைசியாக 2016ல் பிரிட்டனின் ஆன்டி முர்ரே, 9 பட்டம் வென்றிருந்தார்.

ஒட்டுமொத்தமாக 16 பட்டம் கைப்பற்றிய சின்னர், ஆண்டு இறுதியில் வெளியாகும் ஏ.டி.பி., ஒற்றையர் பிரிவு தரவரிசையில் 'நம்பர்-1' இடத்தை தக்கவைத்துக் கொண்டார்.பைனலில் கண்ட தோல்வியின்மூலம் ஜோகோவிச்சின் 100வது ஏ.டி.பி., ஒற்றையர் பட்டம் வெல்லும் கனவு தகர்ந்தது.

Advertisement