பாபர், ஷாகீன் அப்ரிதி நீக்கம்: பாகிஸ்தான் அணியில் குழப்பம்

லாகூர்: பாகிஸ்தான் அணியில் இருந்து முன்னாள் கேப்டன் பாபர் ஆசம் நீக்கப்பட்டார்.
பாகிஸ்தான் சென்றுள்ள இங்கிலாந்து அணி, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்டின் முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் 556 ரன் குவித்தும், தோற்றது. இதையடுத்து அணியில் அதிரடி மாற்றங்களை பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு செய்துள்ளது.
முல்தான் (அக்.15-19), ராவல்பிண்டியில் (அக். 24-28) நடக்க உள்ள அடுத்த இரு போட்டிக்கான அணியில் இருந்து அனுபவ பேட்டர் பாபர் ஆசம், வேகப்பந்துவீச்சாளர்கள் ஷாகின் ஷா அப்ரிதி, நசீம் ஷா, கீப்பர் சர்பராஸ் அகமது என நான்கு முன்னணி வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. உண்மையில் இவர்கள் நீக்கப்பட்டுள்ளனர். ஹசீபுல்லா, 'வேகப்புயல்' முகமது அலி, ஸ்பின்னர் சஜித் கான் சேர்க்கப்பட்டுள்ளனர்.


கேப்டன் எதிர்ப்பு: டெஸ்ட் அரங்கில் பாபர் ஆசம் தொடர்ந்து ஏமாற்றுகிறார். கடந்த 18 இன்னிங்சில் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை. 2023ல் இருந்து இவர் விளையாடிய 9 டெஸ்டில், சராசரி 21 ரன்னுக்கும் குறைவாக உள்ளது. முழங்கால் காயத்தில் இருந்து மீண்டு வந்த ஷாகீன் ஷா அப்ரிதியின் பந்துவீச்சு எடுபடவில்லை. 2023ல் இருந்து 11 இன்னிங்சில் 17 விக்கெட் தான் வீழ்த்தியுள்ளார். இருவரையும் நீக்க, கேப்டன் ஷான் மசூது, தலைமை பயிற்சியாளர் கில்லஸ்பி எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆனால் அகிப் ஜாவித், அலீம் தர் அடங்கிய புதிய தேர்வுக் குழுவினர் 'பார்ம்' இல்லாத வீரர்களை நீக்குவதில் உறுதியாக இருந்துள்ளனர். இதனால் சக வீரர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

பகர் ஜமான் கூறுகையில்,''பாபர் ஆசம் நீக்கம் கவலை அளிக்கிறது. 2020-2023 காலக்கட்டத்தில் கோலி தடுமாறினார். இவரை இந்திய அணியில் இருந்து நீக்கவில்லை. ஆனால், பாகிஸ்தானின் சிறந்த பேட்டர் பாபரை நீக்கியுள்ளனர். அணியின் முக்கிய வீரர்களை குறைத்து மதிப்பிடாமல், அவர்களை பாதுகாக்க வேண்டும்,''என்றார்.

Advertisement