ரஞ்சி கோப்பை: வெற்றியை நோக்கி தமிழகம்

கோவை: ரஞ்சி கோப்பை லீக் போட்டியில் தமிழக அணி வெற்றி நோக்கி முன்னேறுகிறது.

கோவையில் நடக்கும் ரஞ்சி கோப்பை 'டி' பிரிவு லீக் போட்டியில் தமிழகம், சவுராஷ்டிரா அணிகள் விளையாடுகின்றன. சவுராஷ்டிரா அணி முதல் இன்னிங்சில் 203 ரன் எடுத்தது. இரண்டாம் நாள் முடிவில் தமிழக அணி முதல் இன்னிங்சில் 278/3 ரன் எடுத்திருந்தது. ரஞ்சன் பால் (45) அவுட்டாகாமல் இருந்தார்.
மூன்றாம் நாள் ஆட்டத்தில் பிரதோஷ் ரஞ்சன் பால் (49) அரைசத வாய்ப்பை இழந்தார். உனத்கட் 'வேகத்தில்' பூபதி குமார் (5), ஷாருக்கான் (8), சோனு யாதவ் (0), கேப்டன் சாய் கிஷோர் (2) வெளியேறினர். ஆன்ட்ரி சித்தார்த் (38) ஆறுதல் தந்தார். தமிழக அணி முதல் இன்னிங்சில் 367 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. முகமது (26) அவுட்டாகாமல் இருந்தார். சவுராஷ்டிரா சார்பில் உனத்கட் 6 விக்கெட் சாய்த்தார்.


புஜாரா 'டக்': பின் 2வது இன்னிங்சை துவக்கிய சவுராஷ்டிரா அணிக்கு ஹார்விக் தேசாய் (5) ஏமாற்றினார். குர்ஜப்னீத் சிங் 'வேகத்தில்' சிராக் ஜானி (3), பார்ஸ்வராஜ் ராணா (6), புஜாரா (0), பிரேரக் மன்கட் (1) வெளியேறினர். சவுராஷ்டிரா அணி 2வது இன்னிங்சில் 35 ரன்னுக்கு 5 விக்கெட்டை இழந்து தடுமாறியது. தேநீர் இடைவேளைக்கு பின், மழையால் 3ம் நாள் ஆட்டம் முன்னதாகவே முடிவுக்கு வந்தது. அர்பித் (15), ஷெல்டன் ஜாக்சன் (5) அவுட்டாகாமல் இருந்தனர். தமிழகம் சார்பில் குர்ஜப்னீத் சிங் 4 விக்கெட் கைப்பற்றினார்.

Advertisement