வருங்கால தலைமுறைகளுக்கு எது அவசியம்: மத்திய அமைச்சர் சொல்வதை கேளுங்க!

சூரத்: வருங்கால தலைமுறைகளின் நலன் கருதி இப்போதிருந்தே மழை நீரை சேகரிக்க தொடங்க வேண்டும் என மத்திய ஜல்சக்தி அமைச்சர் சி.ஆர். பாட்டீல் கூறினார்.

சூரத்தில், 2021 மார்ச் மாதத்தில் பிரதமர் மோடியால் தொடங்கப்பட்ட 'கேட் தி ரெயின்' பிரசாரத்தின் கீழ் 'நீர் சேகரிப்பு - பொதுமக்கள் பங்கேற்பு' என்ற தலைப்பில் இன்று கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் சி.ஆர். பாட்டீல், குஜராத் முதல்வர் பூபேந்திர படேல், ராஜஸ்தான் முதல்வர் பஜன்லால் மற்றும் பீகார் துணை முதல்வர் சாம்ராட் சவுத்ரி ஆகியோரும் பங்கேற்றனர்.


இந்நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் பாட்டீல் பேசியதாவது:மக்கள், பெரிய அளவில் தண்ணீர் பிரசாரத்தில் ஈடுபடுவது, வருங்கால தலைமுறைகளுக்கு அவசியமானது.

மழைநீர் சேகரிப்பு மூலம் நிலத்தடி நீரை நிரப்புவதற்கான பிரசாரத்தில் குஜராத், ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த மக்கள் இணைந்து வருகின்றனர்.


உலக மக்கள் தொகையில், இந்தியா 18 சதவீதமும், கால்நடைகள் 18 சதவீதமும் உள்ளது, ஆனால் குடிநீர் மட்டும் 4 சதவீதமே உள்ளது. அதற்கான ஏற்பாடுகளை செய்யாவிட்டால் மிகவும் சிரமம்.


நமது வருங்கால தலைமுறைகளுக்கு பணத்தையும் சொத்துக்களையும் விட்டுச் செல்லலாம்; தண்ணீர் இல்லாத பூமியை விட்டுச் சென்று யாருக்கு என்ன பயன்? இதை உணர்ந்து அனைவரும் செயல்பட வேண்டும்.

இவ்வாறு மத்திய ஜல் சக்தி அமைச்சர் கூறினார்.

Advertisement