பொய்களால் இனி பிரயோஜனம் இல்லை என்பதை உணர்ந்த காங்!கார்கேவை காய்ச்சிய பா.ஜ.

புதுடில்லி: தாங்கள் கூறும் பொய்களை மக்கள் நம்பமாட்டார்கள் என்பதை காங்கிரஸ் புரிந்து கொண்டு விட்டதாக பா.ஜ., விமர்சித்துள்ளது.



காங்கிரஸ் கட்சியை நகர்ப்புற நக்சல்கள்தான் வழிநடத்துவதாக பிரதமர் மோடி அண்மையில் குற்றம்சாட்டி இருந்தார். அதற்கு பதில் கூறும் விதமாக பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பா.ஜ., ஒரு பயங்கரவாத கட்சி என்று விமர்சித்து இருந்தார்.

இந்நிலையில் கார்கே குற்றச்சாட்டுக்கு பா.ஜ., பதிலடி தந்துள்ளது. இனி தமது கட்சி கூறும் பொய்களை மக்கள் நம்ப மாட்டார்கள் என்று காங்கிரஸ் உணர்ந்து கொண்டு விட்டதாக பா.ஜ., தேசிய செய்தித்தொடர்பாளர் பிரதீப் பண்டாரி கூறி உள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறி இருப்பதாவது:

எங்கள் கட்சி தலைவர் நட்டா, இதுகுறித்து முன்பே கூறிவிட்டார். கார்கே வெறுப்பின் உச்சத்தில் இருக்கிறார். காரணம் அவர்களின் பொய்கள் நிரம்பிய பலூன் ஹரியானா தேர்தலில் வெடித்துவிட்டது.

விவசாயிகள், பட்டியலினத்தவர்கள், பெண்கள் என அனைவரும் நாட்டுக்கான வளர்ச்சியை தரும் பிரதமர் மோடிக்கு ஆதரவு தந்துள்ளனர். வெறுப்பில் இருக்கும் காங்கிரஸ், இனி மக்களிடம் தமது பொய்கள் எடுபடாது என்பதை உணர்ந்து கொண்டு இருக்கிறது.

அடுத்துவரக் கூடிய மஹாராஷ்டிரா, ஜார்க்கண்ட் தேர்தலிலும் காங்கிரசுக்கு தோல்வி கிடைக்கப்போகிறது என்பதே கார்கே பேச்சுகளில் இருந்து தெரிகிறது.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Advertisement