'காஸ்ட்லீ' வீரர் ஹர்மன்பிரீத் சிங்: ஹாக்கி இந்தியா லீக் ஏலத்தில் ஒப்பந்தம்

புதுடில்லி: ஹாக்கி இந்தியா லீக் வீரர்கள் ஏலத்தில் இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் ரூ. 78 லட்சத்திற்கு சூர்மா அணியில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
ஹாக்கி இந்தியா (எச்.ஐ.,) சார்பில் 2013 முதல் 2017 வரை ஐ.பி.எல்., பாணியில் ஹாக்கி இந்தியா லீக் (எச்.ஐ.எல்.,) தொடர் நடத்தப்பட்டது. அதன்பின் இத்தொடர் நடக்கவில்லை. ஏழு ஆண்டுகளுக்கு பின், மீண்டும் நடத்தப்படுகிறது. ஆண்கள் பிரிவில் 8 அணிகள் களமிறங்குகின்றன. தவிர, முதன் முறையாக பெண்களுக்கான தொடரும் நடத்தப்படுகிறது.


இதற்கான வீரர்கள் ஏலம் டில்லியில் நடக்கிறது. பாரிஸ் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற இந்திய அணியில் இடம் பெற்றிருந்த வீரர்களை ஒப்பந்தம் செய்ய கடுமையான போட்டி நிலவியது. கேப்டன் ஹர்மன்பிரீத் சிங், அதிகபட்சமாக ரூ. 78 லட்சத்திற்கு பஞ்சாப்பை சேர்ந்த சூர்மா ஹாக்கி கிளப் அணி ஒப்பந்தம் செய்தது.

இந்திய வீரர் அபிஷேக், ரூ. 72 லட்சத்திற்கு பெங்கால் அணிக்கு தேர்வானார். மற்றொரு இந்திய வீரர் ஹர்திக் சிங், ரூ. 70 லட்சத்திற்கு உ.பி., ருத்ராஸ் அணியில் ஒப்பந்தமானார். தமிழக டிராகன்ஸ் அணியில் இந்தியாவின் அமித் ரோஹிதாஸ் (ரூ. 48 லட்சம்), அயர்லாந்தின் டேவிட் ஹார்டே (ரூ. 32 லட்சம்) ஒப்பந்தம் செய்யப்பட்டனர்.
மற்ற இந்திய வீரர்களான ஜக்ராஜ் சிங் (ரூ. 48 லட்சம், பெங்கால்), சுமித் (ரூ. 46 லட்சம், ஐதராபாத்), சுக்ஜீத் சிங் (ரூ. 42 லட்சம், பெங்கால்), மன்பிரீத் சிங் (ரூ. 42 லட்சம், கோனாசிகா), ஜர்மன்பிரீத் சிங் (ரூ. 40 லட்சம், டில்லி), ராஜ்குமார் பால் (ரூ. 40 லட்சம், டில்லி), விவேக் சாகர் பிரசாத் (ரூ. 40 லட்சம், சூர்மா), லலித் குமார் (ரூ. 28 லட்சம், உ.பி.,), மன்தீப் சிங் (ரூ. 25 லட்சம், கோனாசிகா, விசாகப்பட்டினம்) உள்ளிட்டோரும் ஒப்பந்தம் செய்யப்பட்டனர்.


வெளிநாட்டு வீரர்களான ஜெர்மனியின் ஜீன்-பால் டேன்பெர்க் (ரூ. 27 லட்சம், ஐதராபாத்), நெதர்லாந்தின் பிர்மின் பிளாக் (ரூ. 25 லட்சம், பெங்கால்), பெல்ஜியத்தின் வின்சென்ட் வனாஷ் (ரூ. 23 லட்சம், சூர்மா), பிரிட்டனின் ஆலிவர் பெய்ன் (ரூ. 15 லட்சம், கோனாசிகா), அர்ஜென்டினாவின் தாமஸ் சான்டியாகோ (ரூ. 10 லட்சம், டில்லி) ஆகியோரும் ஒப்பந்தமாகினர்.

Advertisement