ஐவர் கால்பந்து போட்டிபட்டாபிராம் அணி த்ரில் வெற்றி

சென்னை,ஆவடி அடுத்த பட்டபிராம், விம் சித்தாஸ் கால் பந்தாட்ட கிளப் சார்பில், ஐவர் கால் பந்தாட்ட போட்டி சி.வி.ஆர்.டி.இ., மைதானத்தில், நேற்று முன்தினம் மாலை துவங்கி, நேற்று அதிகாலை முடிந்தது.

இப்போட்டியில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களைச் சேர்ந்த 16 அணிகள் பங்கேற்றன.

பட்டாபிராம் சின்னி செலக்ட் அணியும், பாரதிமோகன் கால் பந்தாட்ட கிளப் அணியும், இறுதி போட்டிக்கு தகுதி பெற்றன.

இறுதி போட்டியில் கோப்பையை கைப்பற்ற துவக்கம் முதலே, துடிப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தின. ஆட்டம் துவங்கிய 5வது நிமிடத்தில், சின்னி செலக்ட் அணி வீரர் விக்கி, ஒரு கோல் அடித்தார்.

சுதாரித்த பாரதி மோகன் அணியினர், 7வது நிமிடத்தில் பதில் கோல் அடிக்க இரு அணிகளும் சமநிலை வகித்தன. தொடர்ந்து, இரு அணி வீரர்களும் கோல் அடிக்கும் முயற்சியை, கோல் கீப்பர்கள் லாவகமாக தடுக்க, ஆட்டம் சமனில் முடிந்தது.

இதனால், வெற்றியாளரைத் தீர்மானிக்க, டை பிரேக்கர் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் சின்னி செலக்ட் அணி வீரர்கள், தங்களுக்கு வழங்கப்பட்ட மூன்று வாய்ப்புகளையும் கோலாக மாற்றினர்.

அடுத்த வாய்ப்பில், பாரதி மோகன் அணியினர், முதல் இரண்டு வாய்ப்புகளையும் கோலாக மாற்ற, ஆட்டத்தில் பரபரப்பு நிலவியது.

ஆனால், மூன்றாவது வாய்ப்பை சின்னி செலக்ட் அணி கோல் கீப்பர் கமலேஷ், 5 அடி துாரம் பறந்து, பந்தை தடுத்தார்.

இதனால், பட்டாபிராம் சின்னி செலக்ட் அணி 3 - 2 என்ற கோல் கணக்கில் திரில் வெற்றி பெற்று, கோப்பையை தட்டிச் சென்றது. பட்டாபிராம் அணியின் வெற்றிக்கு உதவிய கோல்கீப்பர் கமலேஷ், சக வீரர்களால் பாராட்டப்பட்டார்.

Advertisement