திருவள்ளூர், கும்மிடியில் மழை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் தயார்

திருவள்ளூர்,
திருவள்ளூர் பகுதியில் முன்தினம் நள்ளிரவு முதல் அதிகாலை 7:00 மணி வரை பலத்த மழை பெய்தது. காலை, 7:00 மணிக்குப் பின், மழை நின்றாலும், வானம் மேக மூட்டத்துடன் காட்சியளித்தது. இருப்பினும், மழை அச்சத்தால், சாலைகளில் வாகன போக்குவரத்து வழக்கத்தை விட குறைவாக இருந்தது.

இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவித்ததால், தமிழக அரசு திருவள்ளூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு, பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளது.

கும்மிடிப்பூண்டி பகுதியில் நேற்று நள்ளிரவு முதல் அதிகாலை வரை கனமழை பெய்தது. குடியிருப்பு மற்றும் சாலைகளில் உள்ள தாழ்வான பகுதிகளில் நேற்று மழை வெள்ளம் தேங்கியது.

தேசிய நெடுஞ்சாலையில், துராபள்ளம், ஓபுளாபுரம், பெத்திக்குப்பம், கும்மிடிப்பூண்டி, தச்சூர் பகுதிகளில் உள்ள இணைப்பு சாலைகளில் மழைநீர் தேங்கியது. பல இடங்களில் சாலை பழுதாகி வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

அடுத்தடுத்த நாட்களில் வடகிழக்கு பருவ மழை தீவிரம் அடையும் என்பதால், அதற்கான முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை, வருவாய் மற்றும் உள்ளாட்சி துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

l திருவள்ளுர் கலெக்டர் அலுவலகத்தில், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் வேளாண்மை துறை இயக்குநர் முருகேஷ் நேற்று அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

கலெக்டர் பிரபுசங்கர் முன்னிலை வகித்து, பேசியதாவது:

திருவள்ளுர் மாவட்டத்தில் வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்படும் பகுதியாக 133 இடம் கண்டறியப்பட்டு, பல்வேறு துறைகள் அடங்கிய மண்டல குழு நியமிக்கப்பட்டு உள்ளது.

மாவட்டத்தில் 4,480 முதல் நிலை பொறுப்பாளருக்கு பயிற்சி வழங்கப்பட்டு உள்ளது.

பொதுமக்களை பாதுகாப்பாக தங்க வைக்க 660 தற்காலிக தங்குமிடம் தயார் நிலையில் உள்ளது. மீட்பு நடவடிக்கைக்கு தேவையான அனைத்து உபகரணங்கள் தயார் நிலையில் உள்ளது.

பொதுமக்கள் மழை, வெள்ளம் குறித்து, மாவட்ட பேரிடர் தடுப்பு கட்டுப்பாட்டு அறைக்கு, கட்டணமில்லா தொலைபேசி எண்.1077, 044----27664177, 044--27666746ல் தகவல் தெரிவிக்கலாம். மேலும், 94443 17862, 94989 01077 ஆகிய வாட்ஸாப் எண்களிலும், தகவல் தெரிவிக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement