மோசடி நிறுவனத்தின் பங்குதாரர் வீட்டை முற்றுகையிட முயன்றவர்களால் பரபரப்பு


ஈரோடு, அக். 15-
ஈரோட்டில் முனிசிபல் காலனியில், யுனிக்யூ எக்ஸ்போர்ட்ஸ் என்ற நிறுவனமும், நசியனுார் சாலையில் ஈஸ்ட் வேலி அக்ரோ பார்ம்ஸ் நிறுவனமும், 2017ல் துவங்கப்பட்டது.
இவற்றின் நிர்வாக இயக்குனராக, ஈரோடு, இடையன்காட்டு வலசை சேர்ந்த நவீன்குமார், 38, செயல்பட்டார். இவர் தந்த கவர்ச்சி விளம்பரத்தை நம்பி முன்னாள் ராணுவத்தினர், மக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் முதலீடு செய்தனர். இரு தவணை மட்டும் பணத்தை கொடுத்த நிலையில், அதன் பிறகு கொடுக்கவில்லை.
பாதிக்கப்பட்டோர் புகாரின்படி ஈரோடு மாவட்ட குற்றப்பிரிவு போலீசார், நவீன்குமாரை கைது செய்தனர். வழக்கும் பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டது. கடந்த ஜூலை வரை நிறுவனத்தின் மீது, 263 பேர் அளித்த புகாரில், ௩9 கோடி ரூபாய் வரை மோசடி நடந்தது உறுதியாகியுள்ளது.
இது தொடர்பாக நிறுவன பங்குதாரர்களான பிரபு, மதன் குமார், பிளாங்கிளின், ராமநாதபுரத்தை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் முத்து செல்வம் உள்ளிட்டோரை போலீசார் தேடி வருகின்றனர். இதில் பிரபுவின் வீடு, ஈரோடு, பழையபாளையம், கணபதி நகரில் உள்ளது. பணத்தை டெபாசிட் செய்து ஏமாந்த, 50 பேர் நேற்று காலை அவரது வீட்டை முற்றுகையிட திரண்டனர். இதையறிந்து சென்ற வீரப்பன்சத்திரம் போலீசார் அவர்களை தடுத்து, பேச்சுவார்த்தை
நடத்தினர்.
உரிய ஆதாரங்களுடன் ஈரோடு பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகாரளித்தால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மாறாக வீட்டை முற்றுகையிட்டால் வழக்குப்பதிவு செய்யப்படும் என எச்சரிக்கவே, கலைந்து சென்றனர்.

Advertisement