வனத்தில் ௧௨ கி.மீ., அபாயம் பயணம் மாணவர்களுக்கு வாகன வசதி தேவை



ஈரோடு, அக். 15-
ஈரோடு கலெக்டர் ராஜகோபால் சுன்கராவிடம், சத்தியமங்கலம் சுடர் அமைப்பு இயக்குனர் டராஜ் தலைமையில் வழங்கிய மனுவில் கூறியதாவது: டி.என்.பாளையம் அருகே கொங்கர்பாளையம் பஞ், விளாங்கோம்பை கிராமத்தில் உள்ள, 24 பள்ளி குழந்தைகள், வினோபா நகர் தொடக்க பள்ளி, கொங்கர்பாளையம் உயர்நிலை பள்ளியில் படிக்கின்றனர்.
இவர்களது கிராமத்தில் இருந்து, 12 கி.மீ., வனவிலங்குகள் நடமாட்டம் அதிகமுள்ள வனப்பகுதியில் தினமும் பயணிக்கின்றனர். பள்ளி கல்வித்துறை மூலம் திறந்தவெளி சரக்கு வாகனம் மூலம் அழைத்து செல்ல ஏற்பாடு செய்தனர். மழை காலமாக இருப்பதால் குழந்தைகளும், அவர்களது புத்தகங்களும் நனையும் நிலை ஏற்பட்டுள்ளது.
அதேசமயம் அந்த வாகனத்துக்கு வாடகை கிடைக்காததால், அதுவும் நிறுத்தப்பட்டுள்ளது. ஒரு வாரமாக குழந்தைகள் பள்ளிக்கு செல்லவில்லை. மாவட்ட நிர்வாகம் பாதுகாப்புடன் கூடிய வாகனத்தை ஏற்பாடு செய்து, குழந்தைகள் பள்ளிக்கு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார்.

Advertisement