பர்கூர் அருகே செல்லியம்மன் கோவிலில் 5 பவுன் நகை, 10 கிலோ வெள்ளி திருட்டு
கிருஷ்ணகிரி: பர்கூர் அருகே, செல்லியம்மன் கோவில் கதவை உடைத்து, 10 கிலோ வெள்ளி பொருட்கள், ஐந்து பவுன் தங்க நகை, மூன்று 'சிசிடிவி' கேமராக்களை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அடுத்த செட்டிப்பள்ளியில் செல்லியம்மன் கோவில் உள்ளது. பூசாரியாக செல்லன் பணிபுரிகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு, பூஜைகள் முடிந்த பின், கோவிலை பூட்டி விட்டு சென்றார். வழக்கம் போல, நேற்று காலை அவர் வந்த போது, கோவில் கதவுகள் உடைக்கப்பட்டு இருந்தன.
அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது, சுவாமிக்கு அணிவிக்கப்பட்டிருந்த, ஐந்து பவுன் தங்க சங்கிலி, 10 கிலோ வெள்ளி பொருட்கள் திருடப்பட்டு இருந்தது தெரியவந்தது. மேலும், கோவிலில் கண்காணிப்பிற்காக வைக்கப்பட்டிருந்த மூன்று 'சிசிடிவி' கேமராக்களையும் மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். கோவிலுக்கு கந்திகுப்பம் போலீசாருடன், கைரேகை நிபுணர்கள் வந்தனர். இவர்கள் தடயங்களை சேகரித்தனர்.
மேலும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது சிறிது துாரம் ஓடி நின்றது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இக்கோவிலில், இதற்கு முன்பு மூன்று முறை திருட்டு சம்பவங்கள் நடந்துள்ளன.