பொங்கல் பண்டிகை ஆர்டருக்காக ஜவுளி உற்பத்தியாளர்கள் காத்திருப்பு

பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் ஜவுளி உற்பத்தியாளர்கள், பொங்கல் பண்டிகைக்கு, 'ஆர்டர்' கிடைக்குமா என, எதிர்பார்த்து காத்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையத்தில் விசைத்தறி பிரதான தொழிலாக உள்ளது. இங்கு சட்டை, வேட்டி, சேலை, லுங்கி, துண்டு உள்ளிட்ட துணிகள் உற்பத்தி செய்யப்பட்டு, இந்தியா முழுவதும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. பொங்கல், தீபாவளி மற்றும் வடமாநில பண்டிகை காலத்தில் விற்பனை அதிகளவு இருக்கும். அந்தளவுக்கு உற்பத்தியும் இரவு, பகலாக நடக்கும். சில மாதங்களாக, உற்பத்தி செய்த துணிகள் விற்பனையின்றி, பல கோடி ரூபாய் மதிப்பில் தேக்கமடைந்துள்ளன. தீபாவளி பண்டிகை சமயத்தில் விற்பனை அதிகரிக்கும், ஆர்டரும் வரும் என, ஜவுளி உற்பத்தியாளர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், ஆர்டரும், விற்பனையும் எதிர்பார்த்த அளவு இல்லை. இதனால், உற்பத்தி செய்த துணிகள், 50 சதவீதம் விற்பனையின்றி தேங்கியதால், ஜவுளி உற்பத்தியாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

தற்போது, தீபாவளி முடிந்துள்ளதால், அடுத்ததாக பொங்கல் பண்டிகை ஓரிரு மாதங்களில் வர உள்ளது. தீபாவளிக்கு ஜவுளி விற்பனை தொய்வு நிலையில் காணப்பட்டதால், அடுத்து வரும் பொங்கல் பண்டிகைக்காவது எதிர்பார்த்தளவு விற்பனையும், ஆர்டரும் கிடைக்குமா? என, பள்ளிப்பாளையம் ஜவுளி உற்பத்தியாளர்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர்.

Advertisement