சிவகாசி கிராமங்களில் விவசாய பணிகள் மும்முரம்

விருதுநகர் : விருதுநகர் மாவட்ட கிராமங்களில் குறிப்பாக சிவகாசி ஒன்றிய பகுதிகளில் விவசாய பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.

மாவட்டத்தில் அக்டோபர் முதல் வாரத்தில் இருந்து மழை பெய்து வருகிறது. தற்போது நவம்பரில் மாலை நேரம் மழையாகவும், காலை, மதிய நேரங்களில் மிதமான வெயிலும் வாட்டி வருகிறது. இந்நிலையில் பல நீர்நிலைகளில் நீர்வரத்து ஏற்பட்டுள்ளது.

விளைநிலங்களில் ஈரம் ஏற்பட்டுள்ளதால் உழவு செய்து விட்டு நட துவங்குகின்றனர். பட்டாசு ஆலைகளுக்கு பெயர் பெற்ற சிவகாசியில் மக்காசோளம், நெல், சூரியகாந்தி போன்ற மானாவாரி பயிர்களும், மிளகாய், வெண்டை, புடலை போன்ற தோட்டக்கலை பயிர்களும் விளைவிக்கப்பட்டு வருகின்றன. நேற்று கொத்தனேரி, கவுண்டன்பட்டி, சித்தமநாயக்கன்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாய பணிகள் மும்முரமாக துவங்கி உள்ளன.

நெல், மக்காசோள நடவு தீவிரமடைந்துள்ளது. விவசாய தொழிலாளர்கள் நாற்று நட்டு வருகின்றனர். வரும் நாட்களிலும், அடுத்தடுத்த நேரங்களிலும் மழையை எதிர்பார்த்துள்ளனர்.

Advertisement