பசுமை நகர திட்டத்தின் கீழ் மரக்கன்று நடும் பணி துவக்கம்
புதுச்சேரி : சுற்றுச்சூழல் துறை சார்பில் 'பசுமை நகரம்' திட்டத்தின் கீழ் மரக்கன்று நடும் பணி துவக்கி வைக்கப்பட்டது.
சுற்றுச்சூழல் துறை மூலம் புதுச்சேரி முழுதும் 1 லட்சம் மரக்கன்று நடும், பசுமை புதுச்சேரி செயல்திட்டத்தை கடந்த அக். 2ம் தேதி, கவர்னர் கைலாஷ்நாதன் மற்றும் முதல்வர் ரங்கசாமி துவக்கி வைத்தனர். இந்த செயல்திட்டத்தில், பசுமை நகரம் ஒரு அங்கமாக சேர்க்கப்பட்டுள்ளது.
அதன்படி புதுச்சேரி மற்றும் உழவர்கரை நகராட்சிகளில் 10 ஆயிரம் மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக 9000 சதுர மீட்டர் பரப்பு நிலம் புதுச்சேரி நகராட்சியிலும், 6500 சதுர மீட்டர் பரப்பளவு உழவர்கரை நகராட்சியிலும் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
நகர பகுதியில் உள்ள பல்வேறு இடங்களில் மரக்கன்றுகள் நட மகிழம், சரக்கொன்றை, மரவள்ளி, அசோக போன்ற 10 ஆயிரம் மரக்கன்றுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
பசுமை நகர திட்ட துவக்க விழா ரெட்டியார்பாளையம் செல்லம்பாபு நகரில் நடந்தது. சிவசங்கரன் எம்.எல்.ஏ., மரக்கன்று நட்டு பணியை துவக்கி வைத்தார். புதுச்சேரி மாசு கட்டுப்பாட்டு குழும உறுப்பினர் செயலர் ரமேஷ், உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஷ்ராஜ், சுற்றுச்சூழல் பொறியாளர் காளமேகம், விஞ்ஞானி விப்பின் பாபு, திட்ட அலுவலர் பன்னீர்செல்வம், சாந்தலட்சுமி, விமல்ராஜ், உழவர்கரை நகராட்சி உதவி பொறியாளர் சிவக்குமார், தினேஷ் செல்லபாப்பு நகர் குடியிருப்பு நலச்சங்க தலைவர் குபேர சிவக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.