'சிப்காட்' எதிர்ப்பு குழு உள்ளிருப்பு போராட்டத்திற்கு அனுமதி மறுப்பு
நாமக்கல்: நாமக்கல் அடுத்த வளையப்பட்டி, என்.புதுப்பட்டி, பரளி, அரூர் உள்ளிட்ட கிராமங்களை உள்ளடக்கி, 820 ஏக்கரில், 'சிப்காட்' தொழிற்பேட்டை அமைப்பதற்கான நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.
தற்போது, நிலம் அளவீடு செய்யும் பணி வளையப்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் நடந்து வருகிறது. நீர் நிலைகள் கையகப்படுத்துவது குறித்து நில நிர்வாக ஆணையர் அனுப்பிய கடிதத்துக்கு, மாவட்ட நிர்வாகம் உரிய பதிலளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, நாமக்கல் -- திருச்சி சாலையில் உள்ள, 'சிப்காட்' நிலம் எடுப்பு அலுவலக வளாகத்தில், 'சிப்காட்' எதிர்ப்பு குழுவினர், விவசாய முன்னேற்ற கழகத்தினர் உள்ளிருப்பு போராட்டம் நடத்த முயன்றனர். ஆனால், போலீசார் அனுமதி மறுத்தனர். மேலும், நில எடுப்பு மாவட்ட வருவாய் அலுவலர் பணிக்கு வராததால், மற்றொரு நாளில் நேரடியாக வந்து முறையீடு செய்து கொள்ள போலீஸ் தரப்பில் அறிவுறுத்தி அனுப்பி வைத்தனர்.