லாரியில் இருந்து ரேஷன் அரிசி மூட்டைகள் சாலையில் சரிந்து விழுந்ததால் பரபரப்பு

பாகூர் : பாகூர் அருகே லாரியில் கொண்டு செல்லப்பட்ட, ரேஷன் அரிசி மூட்டைகள் திடீரென சரிந்து சாலையில் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுச்சேரியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ரேஷன் கடை தாரர்களுக்கு 10 கிலோ அரிசி, 2 கிலோ சர்க்கரை வழங்கப்படும் என முதல்வர் ரங்கசாமி அறிவித்து இருந்தார்.

இதையடுத்து, ஒவ்வொரு பகுதியாக ரேஷன் கடைகள் திறக்கப்பட்டு, பயனாளிகளுக்கு அரிசி, மற்றும் சர்க்கரை வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இலவச அரிசி மூட்டைகளை ஏற்றிக் கொண்டு, நாகப்பட்டினம் - விழுப்புரம் புறவழிச்சாலை சோரியாங்குப்பத்தில் இருந்து சேலியமேடு நோக்கி நேற்று காலை லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது.

பின்னாட்சிக்குப்பம் சந்திப்பு அருகே சென்ற போது, லாரியில் பின் பகுதியில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த அரிசி மூட்டைகள் திடீரென சரிந்து சாலையில் விழுந்தது.

அவ்வழியாக சென்ற பொது மக்கள் லாரி டிரைவரிடம் தெரிவித்தனர். இதையடுத்து, லாரியை ஓரம் கட்டி நிறுத்தி விட்டு, சாலையில் கிடந்த அரிசி மூட்டைகளை மீண்டும் ஏற்றிக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

இதனால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement