'குற்றம், போக்குவரத்து பிரிவுகள் தொடங்கப்படும்'

வீரபாண்டி: ஆட்டையாம்பட்டி போலீஸ் ஸ்டேஷன், கடந்த ஜனவரியில், மாநகர போலீஸ் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது. அந்த ஸ்டேஷனில் நேற்று, மாநகர போலீஸ் துணை கமிஷனர் வேல்முருகன், ஆவண பதிவேடு உள்ளிட்டவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது இன்ஸ்பெக்டர் விதுன்குமார் உள்ளிட்ட போலீசாரிடம், வழக்குகளின் எண்ணிக்கை, தீர்க்கப்படாத வழக்கு, நீதிமன்ற நிலுவை உள்ளிட்ட விபரங்களை கேட்டறிந்தார். தொடர்ந்து மரக்கன்று நட்டார்.

பின் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: ஆட்டையாம்பட்டி போலீஸ் ஸ்டேஷன், மாநகர போலீஸ் கட்டுப்பாட்டுக்கு வந்த பின் நடப்பாண்டு விபத்துகள், குற்றச்சம்பவங்கள் குறைந்துள்ளன. இதற்கு போலீசாரின் ரோந்து பணி உதவியாக இருந்துள்ளது. ஸ்டேஷன் வளாகத்தில் பழைய காவலர் குடியிருப்பு சிதிலமடைந்துள்ளது. காவலர் குடியிருப்பு கட்ட பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மாநகர போலீஸ் ஸ்டேஷன்களை போல் ஆட்டையாம்பட்டியிலும் குற்றப்பிரிவு, விபத்து மற்றும் போக்குவரத்து பிரிவுகள் தொடங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement