தமிழக பவுலர்கள் தடுமாற்றம்: ரஞ்சி கோப்பையில்
கவுகாத்தி: ரஞ்சி கோப்பை லீக் போட்டியில் தமிழக பவுலர்கள் விக்கெட் வீழ்த்த முடியாமல் தடுமாறினர்.
அசாமின் கவுகாத்தியில் நடக்கும் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் 'டி' பிரிவு லீக் போட்டியில் தமிழகம், அசாம் அணிகள் விளையாடுகின்றன. முதல் நாள் முடிவில் தமிழக அணி முதல் இன்னிங்சில் 299/7 ரன் எடுத்திருந்தது.
இரண்டாம் நாள் ஆட்டத்தில் எட்டாவது விக்கெட்டுக்கு 63 ரன் சேர்த்த போது சோனு யாதவ் (29) அவுட்டானார். தமிழக அணி முதல் இன்னிங்சில் 338 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. முகமது அலி (49) அவுட்டாகாமல் இருந்தார்.
பின் களமிறங்கிய அசாம் அணியின் ரிஷவ் தாஸ் (54) அரைசதம் கடந்தார். ஆட்டநேர முடிவில் அசாம் அணி முதல் இன்னிங்சில் 3 விக்கெட்டுக்கு 176 ரன் எடுத்திருந்தது. தினேஷ் தாஸ் (54), சிப்சங்கர் ராய் (23) அவுட்டாகாமல் இருந்தனர். தமிழகம் சார்பில் குர்ஜப்னீத் சிங், சோனு யாதவ், முகமது அலி தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
மும்பையில் நடக்கும் 'ஏ' பிரிவு லீக் போட்டியில் மும்பை, ஒடிசா அணிகள் விளையாடுகின்றன. மும்பை அணியின் ஸ்ரேயாஸ் ஐயர், 201 பந்தில் இரட்டை சதம் விளாசினார். சித்தேஷ் லத், 150 ரன்னை கடந்தார். ஐந்தாவது விக்கெட்டுக்கு 354 ரன் சேர்த்த போது ஸ்ரேயாஸ் (233 ரன், 9 சிக்சர், 24 பவுண்டரி) அவுட்டானார். மும்பை அணி முதல் இன்னிங்சில் 602/4 ரன் எடுத்து 'டிக்ளேர்' செய்தது. சித்தேஷ் (169) அவுட்டாகாமல் இருந்தார்.
முதல் தர போட்டியில் 15வது சதத்தை பதிவு செய்த ஸ்ரேயாஸ், மூன்றாவது இரட்டை சதம் விளாசினார். தவிர இவர், முதல் தர போட்டியில் தனது அதிகபட்ச ரன்னை பதிவு செய்தார். இதற்கு முன் 202* ரன் (எதிர்: ஆஸி., 2017-18 'பார்டர்-கவாஸ்கர் டிராபி') எடுத்திருந்தார்.