விபத்தை ஏற்படுத்தும் ஆக்கிரமிப்புகளால் அருப்புக்கோட்டையில் மக்கள் அவதி
அருப்புக்கோட்டை, : அருப்புக்கோட்டை தெற்கு தெரு பகுதியில் விபத்துக்கள் ஏற்படும் வகையில் ஆக்கிரமிப்புகள் அதிகமாக உள்ளதை நகராட்சியும் நெடுஞ்சாலை துறையும் கண்டு கொள்வதில்லை.
அருப்புக்கோட்டை தெற்கு தெரு பகுதி வழியாக பழைய பஸ் ஸ்டாண்ட் புதிய பஸ் ஸ்டாண்ட்களுக்கு வாகனங்கள் வந்து செல்லும். இந்தப் பகுதியில் வங்கிகள், மருத்துவமனைகள் பள்ளிகள் லேப்கள், கோயில்கள் உள்ளன. தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் இந்த பகுதி வழியாக வந்து செல்வர். முன்பு இந்த ரோட்டில் இரண்டு பஸ்கள் வசதியாக செல்லும் வகையில் இருந்தது.
தற்போது ரோட்டின் இரு புறமும் உச்சபட்ச ஆக்கிரமிப்பில் உள்ளது.
இருபுறமும் உள்ள கடைக்காரர்கள் தங்கள் கடைகளை ரோடு வரை நீட்டித்து வைத்துள்ளனர். நடைபாதையும் ஆக்கிரமிப்பில் உள்ளது. இதனால் மக்கள் ரோட்டில் நடந்து செல்ல வேண்டியுள்ளது.
போக்குவரத்திற்கும் இடைஞ்சலாக உள்ளது. ஆக்கிரமிப்புகளை அகற்ற நகராட்சியின் நகரமைப்பு பிரிவு இருந்தும் பயனில்லை.
இங்குள்ள அதிகாரிகள் எதையும் கண்டு கொள்வது இல்லை. தெற்கு தெரு பகுதி வளைவில் ஆக்கிரமிப்பினால் திரும்ப முடியாமல் கனரக வாகனங்கள் சிரமப்படுகின்றன. கலெக்டர் நகரில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க கோரி, நகராட்சியில் நடந்த கலந்தாய்வு கூட்டத்தில் உத்தரவிட்டு ஒரு மாதமாகியும், அதிகாரிகள் அலட்சியமாக உள்ளனர்.