முதல்வர் பார்வைக்கு -2
ஸ்ரீவில்லிபுத்தூர் : தமிழகத்தின் புகழ்பெற்ற மலைவாச சிவஸ்தலமான காலமான சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலிலுக்கு பக்தர்கள் வருகை அதிகரித்து வரும் நிலையில், அங்கு சபரிமலையில் உள்ளது போல் போதிய அடிப்படை வசதிகள், நீர்வரத்து ஓடைகளில் பாலங்கள், மருத்துவ வசதிகள் செய்து தர வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
மதுரை, விருதுநகர் மாவட்டங்களை பிரிக்கும் மேற்கு தொடர்ச்சி மலை தொடரில் 4 மலைகளுக்கு மத்தியில் அமைந்துள்ள சதுரகிரி மலையில் சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம், சுந்தரமூர்த்தி சுவாமி கோயில்கள் உள்ளன.
மலையடிவாரமான தாணிப்பாறையில் இருந்து 7 கி.மீ.தொலைவில் மலை உச்சியில் உள்ள இக்கோயிலுக்கு வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள மலைப்பாதை வழியாக தான் செல்ல வேண்டும்.
2000க்கு பிறகு தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இருந்தும் பக்தர்கள் வருகை அதிகரித்து வருகிறது. அதிலும் கடந்த சில ஆண்டுகளாக வெளிநாட்டு பக்தர்கள் வருகையும் ஏற்படத் துவங்கியுள்ளது.
ஒரு காலத்தில் தினமும் பக்தர்கள் கோயிலுக்கு சென்று வந்த நிலையில், 2015ல் ஏற்பட்ட வெள்ளத்தில் 9 பேர் பலியான நிலையில் தற்போது அமாவாசை, பவுர்ணமியை முன்னிட்டு பிரதோஷ நாள் முதல் 4 நாட்கள் மட்டுமே பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுகின்றனர்.
பல லட்சம் பக்தர்கள் வரும் கேரளாவின் சபரிமலையில் அடிவாரம் முதல் கோயில் வரை பக்தர்களுக்கு சுகாதார வளாகம், குடிநீர், மருத்துவம், நிழல் மண்டபங்கள் உட்பட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு உள்ளது. ஆனால், பல ஆயிரம் பக்தர்கள் வரும் சதுரகிரியில் அடிவாரம் முதல் கோயில் வரை பக்தர்களுக்கு எந்த வித வசதியும் இல்லை.
மலைப்பாதையில் பாலங்கள், கைப்பிடிகள் அமைக்கவும் திட்டமிடப்பட்டு, வனத்துறை அனுமதி கிடைக்காமல் பணிகள் முடங்கி கிடப்பதால் பக்தர்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இப்பிரச்னையில் தமிழக அரசு தீவிர கவனம் செலுத்தி, சபரிமலையில் உள்ளது போல் சதுரகிரியிலும் போதிய வசதிகள் செய்து தர வேண்டும் என்பது பக்தர்களின் எதிர்பார்ப்பாகும்.