களத்தில் முன்னேற விருப்பம்
திருப்பூர்; நுால் விலை, கிலோவுக்கு, 10 ரூபாய் விலை குறைந்திருப்பதால், தீபாவளிக்கு பின்னரும் திருப்பூர் பின்னலாடை தொழில்துறையினர் உற்சாகமடைந்துள்ளனர்.
வளர்ந்த நாடுகளின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில், திருப்பூர் மட்டுமே தற்போது தகுதிவாய்ந்த தொழில் நகரமாக மாறியிருக்கிறது. கடும் போட்டியை ஏற்படுத்தியிருந்த சீனா, வங்கதேசத்தை காட்டிலும், இந்தியாவின் மீது, வர்த்தகர்களுக்கு நம்பிக்கை பிறந்தது. இந்தியாவில் மட்டுமே, ஸ்திரமான அரசும், அரசமைப்பும் இயங்கி வருகிறது.
வர்த்தக உறவுக்கு சரியான நாடு இந்தியா என்று, பல்வேறு நாட்டு வர்த்தகர்களும் முடிவு செய்தனர். திருப்பூர் ஏற்றுமதியாளர்களும், தங்களது உற்பத்தி திறன் மற்றும் பசுமை சார் உற்பத்தி சாதனைகளை காட்சிப்படுத்தினர். அதன்பயனாக, கடந்த பிப்., மாதத்தில் இருந்து, திருப்பூருக்கு புதிய ஆர்டர் வரத்து அதிகரித்துள்ளது.
கொரோனாவுக்கு பின், 35 ஆயிரம் கோடி ரூபாய் என்ற வர்த்தக விளிம்பில் இருந்து முன்னேற முடியாத திருப்பூர், இந்தாண்டு நிச்சயமாக, 40 ஆயிரம் கோடி ரூபாய் என்ற உயர்நிலையை எட்டும் என்று, ஏற்றுமதியாளர்கள் திடமாக நம்புகின்றனர்; அந்த அளவுக்கு, திருப்பூர் ஏற்றுமதி வர்த்தகம் வளர்ச்சிப்பாதையில் பயணிக்க துவங்கியிருக்கிறது.
பந்தயக் களத்தில் ஓட தயாராக இருக்கும் விளையாட்டு வீரர்களை போல், ஒவ்வொரு நிறுவனமும் ஆயத்தமாக இருக்கிறது. தற்போது, மின் கட்டண சுமை மட்டுமே பெரும் சுமையாக இருக்கிறது. இருப்பினும், சரியான, வாய்ப்பும் வசதிகளும் கிடைக்கும் போது, தொழிலை வெற்றிகரமாக கொண்டு செல்ல தயாராகவே இருக்கின்றனர்.
சாதகமான சூழல் நிலவும் நிலையில், தீபாவளி ஆர்டர்கள் திருப்பூருக்கு அதிகம் கைகொடுத்ததாக நிம்மதி அடைந்தனர். ஏற்றுமதியாளர் மற்றும் உள்நாட்டு பனியன் உற்பத்தியாளர்கள் என, ஒட்டுமொத்த தொழில்துறைக்கும் உற்சாகமூட்டும் வகையில், தீபாவளி முடிந்த, 4வது நாளில், நுால்விலை, கிலோவுக்கு 10 ரூபாய் குறைந்தது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இதுகுறித்து பின்னலாடை தொழில்துறையினர் கூறுகையில், 'போட்டிகளை சமாளிக்க, உற்பத்தி செலவை குறைக்க வேண்டியது கட்டாயம். நுால் விலை குறைந்துள்ளது, உற்பத்தி செலவை குறைக்க வாய்ப்பாக இருக்கும். பஞ்சு விலை நிலையாக இருப்பதால், நுாற்பாலைகளும், நுால் விலையை குறைத்துள்ளன.
பருத்தி சீசன் துவக்கத்தில் நுால்விலை குறைந்துள்ளதால், சில மாதங்களுக்கு மாற்றம் இருக்காது; இந்த வாய்ப்பை பயன்படுத்தி, சிரமமின்றி ஜவுளி உற்பத்தியை மேற்கொள்ளலாம் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது,' என்றனர்.