கட்டட வரைபட அனுமதி கட்டணம் உயர்கிறது? தீர்மானம் நிறைவேற்ற ஊராட்சிகளுக்கு நெருக்கடி

திருப்பூர்; ஊராட்சிகளில், வீட்டுக்கான கட்டட அனுமதி வழங்க, சதுர மீட்டருக்கு, 40 முதல் 50 ரூபாயும், வணிக கட்டடங்களுக்கு, 285 ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அத்துடன், மொத்த மதிப்பீட்டில், 1 சதவீதம் அளவுக்கு, கட்டுமான தொழிலாளர் நலநிதி பங்களிப்பாக செலுத்தப்படுகிறது.

சுயசான்று முறையில் கட்டட உரிமம் பெற, தனியே கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பொதுப்பணித்துறை, கட்டடம் கட்ட, சதுரடிக்கு 22 ரூபாய், கட்டுமான தொழிலாளர் நலநிதியாக செலுத்த வேண்டுமென, நிர்ணயம் செய்துள்ளது. இதனடிப்படையில், ஊராட்சிகளிலும் கட்டண உயர்வு செய்ய வலியுறுத்தப்படுகிறது.

குறிப்பாக, ஊராட்சி நிர்வாகங்கள், சுயசான்று வழிமுறையில் நிர்ணயம் செய்துள்ள கட்டணத்தையே, அனைவருக்குமான கட்டணமாக நிர்ணயித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டுமென, உயர் அதிகாரிகள் வற்புறுத்தி வருகின்றனர். இதனால், ஊராட்சிகளின் கட்டட உரிம கட்டணம், மூன்று முதல் ஐந்து மடங்கு உயரும் அபாயம் உள்ளதாக, உள்ளாட்சி மக்கள் பிரதிநிதிகளிடையே அதிருப்தி நிலவுகிறது.

குறிப்பாக, ஊராட்சி தலைவர்கள் பதவிக்காலம் டிச., மாதம் நிறைவு பெறுகிறது; அதற்குள், கட்டட வரைபட அனுமதிக்கான கட்டண உயர்வை அமல்படுத்த, உயர் அதிகாரிகள் நெருக்கடி கொடுக்கின்றனர்.

இதுகுறித்து ஊராட்சி தலைவர்கள் சிலர் கூறியதாவது:

சுயசான்று முறைக்கு, அதிக கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது; ஊராட்சியில் உரிமம் பெறுவோருக்கு, நடைமுறை கட்டணத்தை சற்று உயர்த்தலாம். மாறாக, ஐந்து மடங்கு வரை உயர்த்துமாறு வற்புறுத்துவது சரியல்ல. அதைக்காட்டிலும், கட்டுமான தொழிலாளர் நலநிதியாக, சதுரடிக்கு 22 ரூபாய் வசூலிக்க வேண்டுமென கூறுவது அதிர்ச்சியாக இருக்கிறது.

சாதாரணமாக, 1000 சதுரடியில் வீடு கட்ட, 20 ஆயிரம் ரூபாய் வரை செலவிட்டு கட்டட உரிமம் பெறுகின்றனர்; இனிமேல், 45 ஆயிரம் ரூபாய் வரை செலவாகும் நிலை ஏற்பட்டுள்ளது. மக்களிடையே கடும் அதிருப்தி ஏற்படும் என்பதால், தமிழக முதல்வர் நேரடியாக தலையிட்டு, இப்பிரச்னைக்கு தீர்வு வழங்க வேண்டும்.

இவ்வாறு, அவர்கள் கூறினர்.

கட்டண உயர்வு விவரம்



'அ' வகைப்பாடு ஊராட்சிகளில், கட்டட வரைபட அனுமதி கட்டணம் (சதுரடிக்கு) - 27 ரூபாய்; 'ஆ' பிரிவு ஊராட்சிகள் - 25 ரூபாய், 'இ' பிரிவு ஊராட்சிகள் - 22 ரூபாய், இதர ஊராட்சிகள் -15 ரூபாய். தற்போதைய நிலவரப்படி, பெரும்பாலான ஊராட்சிகளில், கட்டட வரைபட அனுமதி கட்டம், சதுரடிக்கு, ஐந்து ரூபாயாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement