'டில்லி உஷ்ஷ்ஷ்...!' பா.ஜ.,வின் அடுத்த தலைவர் யார்?
பா.ஜ.,வின் தேசிய தலைவர் ஜெகத் பிரகாஷ் நட்டா மத்திய அமைச்சராகி விட்டார். எனவே, கட்சிக்கு, புதிய தலைவர் நியமிக்கப்பட வேண்டும். இதற்கான ஏற்பாடுகள் துவங்கி விட்டன. அடுத்தாண்டு ஜனவரி இறுதிக்குள் பா.ஜ.,விற்கு புதிய தேசிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார் என, சொல்லப்படுகிறது.
புதிய தலைவரை தேர்ந்தெடுக்க அமைக்கப்பட்ட குழுவிற்கு தலைவராக, தெலுங்கானாவைச் சேர்ந்த பா.ஜ., தலைவர் லக்ஷ்மண் நியமிக்கப்பட்டுள்ளார். தென் மாநிலத்தை சேர்ந்த ஒருவர், பா.ஜ., தேசிய தலைவர் நியமனத்தில் முக்கிய பங்கு வகிப்பது இதுவே முதன்முறை.
தெற்கிலுள்ள முக்கிய மகளிர் தலைவர்கள் புரந்தேஸ்வரி, தமிழிசை, வானதி ஆகியோருக்கு ஒரு உத்தரவிட்டுள்ளாராம் நட்டா; அவர்கள், பா.ஜ., தலைவர் பதவிக்கு ஒருங்கிணைப்பாளர்களாக பணியாற்றுவர்.
பா.ஜ.,விற்கு பெண் அங்கத்தினர்களை சேர்ப்பதில், இந்த தலைவர்கள் சிறந்த முறையில் பணியாற்றினர். அதனால் தான், இவர்களுக்கு இந்த பணி கொடுக்கப்பட்டுள்ளதாக, டில்லி பா.ஜ., வட்டாரங்களில் பேசப்படுகிறது.
ஜார்க்கண்ட், மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தல் பிரசாரங்களில், எப்படி பா.ஜ., மகளிருக்கு முக்கிய பதவிகள் வழங்கி, அரசியலில் பெண்கள் பங்காற்ற அதிக வாய்ப்புகள் அளிக்கப்படுகிறது என, நட்டா பேசினார்.
அப்போது, பழங்குடியினத்தைச் சேர்ந்த திரவுபதி முர்மு ஜனாதிபதி ஆனதை குறித்தும் பேசியுள்ளார். இதையெல்லாம் பார்க்கும்போது, 'ஒரு வேளை அடுத்த பா.ஜ., தேசிய தலைவர் ஒரு பெண்ணாக இருக்குமோ' என பா.ஜ.,வில் கிசுகிசுக்கப்படுகிறது.
ஆரம்பத்தில், 'சிவ்ராஜ் சிங் சவுகான் தேசிய தலைவர் ஆவார்' என, சொல்லப்பட்டது. பின், தர்மேந்திர பிரதான் உட்பட பல பெயர்கள் அடிபட்டன. ஆனால், இப்போது அவர்கள் பட்டியலில் இல்லை என சொல்லப்படுகிறது. பிரதமர் மோடி மற்றும் ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத் ஒப்புதலோடு தான் தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார்.