'டில்லி உஷ்ஷ்ஷ்...!' ஆந்திராவின் யோகி ஆதித்யநாத்!
ஆந்திராவில், முதல்வர் சந்திரபாபு தலைமையில், தெலுங்கு தேசம் கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது; இங்கு, ஜனசேனா கட்சி நடத்தி வரும் பவன் கல்யாண் தான் துணை முதல்வர். தான் ஒரு ஹிந்து என கூறுவதை பெருமையாக கருதுவதாக கூறும் பவன், ஒரு தீவிர ஹிந்துத்வாவாதி.
திருப்பதி லட்டு விவகாரம், சனாதனம் என பல விஷயங்களில் கடுமையாக பேசி வருபவர்.
சமீபத்தில், ஆந்திர உள்துறை அமைச்சர் அனிதாவை கடுமையாக விமர்சித்து, பரபரப்பை ஏற்படுத்தினார். 'ஆந்திராவில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிக அளவில் நடைபெற்று வருகின்றன; அனிதா சரியான நடவடிக்கை எடுக்காவிட்டால், அவருடைய உள்துறை அமைச்சகத்தை நான் எடுத்துக்கொள்வேன்' என, மிரட்டினார்.
இந்த பேச்சின் போது உ.பி., முதல்வர் யோகி ஆதித்ய நாத்தை புகழ்ந்து தள்ளினார் பவன். 'வன்முறையை எப்படி ஒடுக்குவது, கிரிமினல்களை எப்படி கையாளுவது என்பதை, உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத்தைப் பார்த்து கற்றுக் கொள்ள வேண்டும்' என, பேசினார்.
'உ.பி., முதல்வர் பாணியை பின்பற்றி, தென் மாநிலங்களின் யோகி ஆதித்யநாத்தாக முயற்சிக்கிறார் பவன் கல்யாண்' என, ஆந்திர அரசியல்வாதிகள் பேச ஆரம்பித்துவிட்டனர்.