ஆசிய ஹாக்கி: பைனலில் இந்தியா * அரையிறுதியில் ஜப்பானை சாய்த்தது

ராஜ்கிர்: ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி பைனலுக்கு முன்னேறியது இந்தியா. அரையிறுதியில் 2-0 என ஜப்பானை சாய்த்தது.
பீஹாரில் பெண்களுக்கான ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி 7வது சீசன் நடக்கிறது.
நேற்று நடந்த அரையிறுதியில் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பெற்ற இந்தியா ('நம்பர்-9'), 4வது இடம் பிடித்த ஜப்பானை ('நம்பர்-11') எதிர் கொண்டது. ஏற்கனவே லீக் சுற்றில் இந்தியா 3-0 என வீழ்த்தியதால், மீண்டும் எளிதாக வெல்லும் என நம்பப்பட்டது.
முதல் பாதியில் இரு அணியும் கோல் அடிக்கவில்லை. போட்டியின் 48 வது நிமிடத்தில் தீபிகாவை ஜப்பான் அணியினர் 'பவுல்' செய்ய, இந்தியாவுக்கு 'பெனால்டி ஸ்டிரோக்' வாய்ப்பு கிடைத்தது. இதில் துல்லியமாக கோல் அடித்து அசத்தினார் துணைக் கேப்டன் நவ்னீத் கவுர். இந்திய அணி 1-0 என முன்னிலை பெற்றது.
போட்டி முடிய 4 நிமிடம் இருந்த போது, இந்தியாவின் சுனேலிதா, பந்தை சக வீராங்கனை லால்ரெம்சியாமிக்கு 'பாஸ்' செய்தார். இதை பெற்ற லால்ரெம்சியாமி, 'பீல்டு' கோல் அடித்து அசத்தினார். இப்போட்டியில் இந்தியாவுக்கு 13 'பெனால்டி கார்னர்' வாய்ப்பு கிடைத்த போதும், ஒன்றில் கூட கோல் அடிக்கவில்லை. முடிவில் இந்திய பெண்கள் அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, பைனலுக்குள் நுழைந்தது.

ஐந்தாவது முறை

ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கியில் இந்திய பெண்கள் அணி ஐந்தாவது முறையாக பைனலுக்கு முன்னேறியது. இதில் 2016, 2023ல் சாம்பியன் ஆனது. இரண்டு முறை (2013, 2018) இரண்டாவது இடம் பிடித்தது.

சீனாவுடன் மோதல்
நேற்று நடந்த மற்றொரு அரையிறுதியில் சீனா, மலேசியா மோதின. இதில் சீன அணி 3-1 என வென்று, பைனலுக்கு முன்னேறியது. இன்று நடக்கும் பைனலில் இந்தியா, சீனா அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன.

Advertisement