பொய்கையாழ்வார் குளம் சீரமைத்தும் பயனில்லை
காஞ்சிபுரம்:பெருமாளின் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான, காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலுக்கு சொந்தமான தெப்பகுளம் கோவில் அருகே உள்ளது. இக்குளத்தில் பொய்கை ஆழ்வார் அவதரித்ததால், பொய்கை ஆழ்வார் குளம் என அழைக்கப்படுகிறது.
நாளடைவில் இக்குளத்தின் பெயர் மருவி, தற்போது பொய்யாகுளம் என அழைக்கப்படுகிறது. பல்வேறு சிறப்பு பெற்ற இக்குளம் பராமரிப்பு இல்லாமல் சீரழிந்த நிலையில் இருந்தது. இக்குளத்தை சீரமைக்க வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்தி வந்தனர்.
இதையடுத்து, சென்னை பெட்ரோபேக் ஆயில் அண்டு காஸ் நிறுவனத்தின், இயற்கை பாதுகாப்பு மற்றும் மேம்படுத்துதல் திட்டம் மற்றும் எக்ஸ்னோரா இயற்கை சூழல் பாதுகாப்பு அமைப்பு சார்பில், 17.8 லட்சம் ரூபாய் செலவில், 4,080 சதுரமீட்டர் பரப்பளவு கொண்ட குளத்தின் சீரமைப்பு பணி, கடந்த பிப்., மாதம் துவங்கியது.
இதில், குளம் முழுதும் துார்வாரப்பட்டு, படிகள், சுற்றுச்சுவர் மற்றும் கம்பி வலை அமைக்கப்பட்டு குளம் முழுதும் சீரமைக்கப்பட்டது. சீரமைக்கப்பட்ட குளத்தை கோவில் நிர்வாகத்திடம், கடந்த ஜூலை மாதம் ஒப்படைக்கப்பட்டது. சீரமைப்பு பணி முடிந்து ஒரே மாதத்தில் குளத்தில் மீண்டும் படர்ந்திருந்த பாசி அகற்றப்பட்டது.
இந்நிலையில், குளத்தில் மீண்டும் பாசி படர்ந்துள்ளது. இதனால், குளத்தில் உள்ள தண்ணீர் மீண்டும் மாசடையும் சூழல் உள்ளது. அப்பகுதி நிலத்தடி நீராதாரமாக விளங்கும் பொய்கையாழ்வார் அவதரித்த குளத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.