செங்கையில் நிழற்குடை பயன்பாட்டிற்கு வருமா?

செங்கல்பட்டு:செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகம் பகுதியில், பயணியர் நிழற்குடை பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகத்திற்கு, மாவட்டம் முழுதும் இருந்து, பல்வேறு தேவைக்காக, கிராமவாசிகள் மற்றும் நகரவாசிகள் வந்து செல்கின்றனர். இங்கு, பேருந்து நிறுத்தம் இடத்தில், பயணியர் நிழற்குடை இல்லாததால், மழை மற்றும் வெயிலில், பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். நிழற்குடை அமைக்க, கலெக்டரிடம், பொதுமக்கள் மனு அளித்தனர்.

அதன்பின், செங்கல்பட்டு தி.மு.க.., - எம்.எல்.ஏ., வரலட்சுமி, தொகுதி மேம்பாட்டு நிதி 2023-24 ம் ஆண்டில், கலெக்டர் அலுவலகம் பகுதியில், இருபுறமும் நிழற்குடை கட்ட 50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, கலெக்டருக்கு, பரிந்துரை செய்தார்.

இப்பணியை செயல்படுத்த, காட்டாங்கொளத்துார் வட்டார வளர்ச்சி அலுவலருக்கு, கலெக்டர் அருண்ராஜ் உத்தரவிட்டார். பயணிகள் நிழற்குடை கட்ட டெண்டர் விடப்பட்டு, செப்டம்பர் மாதம் பணிகள் துவங்கி, பணிகள் அனைத்தும் முடிந்துள்ளன.

நிழற்குடை திறக்கப்படாததால், குடிமகன்கள் குடிமையமாக, பயன்படுத்திவருகின்றனர். எனவே, பொதுமக்கள் நலன்கருதி, நிழற்குடை பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என, பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Advertisement