தற்காலிக இரும்பு பாலம் அமைப்பு மலைக்கிராம மக்கள் மகிழ்ச்சி
தற்காலிக இரும்பு பாலம் அமைப்பு
மலைக்கிராம மக்கள் மகிழ்ச்சி
ஏற்காடு, டிச. 29-
ஏற்காட்டில் இருந்து, 8 கி.மீ.,ல் புத்துார் மலைக்கிராமம் உள்ளது. அங்குள்ள ஆற்றுப்பாலம், கடந்த, 2ல், பெஞ்சல் புயலின் போது ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டது.
இதனால் புத்துார், அரண்மனை காடு, பாறை கடை, புளியங்கடை உள்ளிட்ட பல்வேறு கிராம மக்கள், பாலத்தை கடக்க முடியாமல், வெகுதுாரம் சுற்றிச்செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.
அதிகாரிகள் ஆய்வு செய்து, புது பாலம் அமைக்கும் பணி விரைவில் தொடங்கும் என தெரிவித்தனர். ஆனால், 20 நாட்களுக்கு மேலாகியும் பாலம் கட்டும் பணி தொடங்கப்படவில்லை. இதனால் கிராம மக்கள், பாலத்தின் ஓரம், மரக்கட்டைகளை வைத்து சிறு அளவில் மரப்பாலம் அமைத்து, அதில் ஆபத்தான நிலையில் சென்று வந்தனர். மேலும் புது பாலம் கட்ட உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மலைக்கிராம மக்கள்
வலியுறுத்தினர்.
இதுகுறித்து, நம் நாளிதழில் கடந்த, 22ல் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக நேற்று, அந்த இடத்தில், ஒன்றிய நிர்வாகம் மூலம், 9 லட்சம் ரூபாய் மதிப்பில் தற்காலிக இரும்பு பாலம் அமைக்கப்பட்டது. இதனால் பாலத்தில் வாகன போக்குவரத்து தொடங்கியதால், புத்துார் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.