பூண்டி ஏரிக்கு செல்லும் ஓடை நீரை கோரைப்புல் உறிஞ்சுவதால் வீண்

திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியம், அரிசந்திராபுரத்தில் துவங்கி, சின்னம்மாபேட்டை, பழையனூர் வழியாக பாயும் ஓடை நீர் மஞ்சாகுப்பம் அருகே கொசஸ்தலையாற்றில் கலந்து பின் பூண்டி நீர்த்தேக்கம் சென்றடைகிறது. இந்த ஓடை கால்வாயின் நீளம் 14 கி.மீ., தூரமும், அகலம் 5 முதல் 60 மீட்டரும் உடையது.

பூண்டி ஏரிக்கு மழைக்காலத்தில் ஓடை கால்வாய் வழியாக கிடைக்கும் நீரில் பழையனூர் ஓடை நீர் அதிகம்.

இந்நிலையில், சின்னம்மாபேட்டை-- பழையனூர் வரையிலான ஓடை கால்வாயில், சுமார் 4 கி.மீ., தூரத்திற்கு கால்வாயை ஆக்கிரமித்து கோரைப்புல் வளர்ந்துள்ளது.

தொடர்ந்து பருவமழை பெய்த நிலையில், ஓடையில் நீர் பெருக்கெடுத்து ஓடியது. கடந்த காலங்களில் பருவமழை பெய்தால் ஓடை கால்வாயில் ஆண்டு முழுதும் நீர் தேங்கி இருக்கும் ஆனால் தற்போது மழைக்காலம் முடியும் முன்னே நீர் இருப்பு குறைந்து காணப்படுகிறது.

இதற்கு ஓடையில் வளர்ந்துள்ள கோரைப்புற்களே காரணம் அவை நீரை உறிஞ்சி விடுவதாக விவசாயிகள் புலம்புகின்றனர்.

மேலும், ஆடு, மாடு உள்ளிட்ட, 5,000க்கும் மேற்பட்ட கால்நடைகள் இந்த பகுதியில் மேய்ச்சலுக்கு வந்து செல்கின்றன. இந்த கால்நடைகளுக்கு கோடைக்காலத்தில், நீர் பருக இந்த ஓடை நீர் பயன்படுகிறது.

தற்போது, மழைக்காலத்தில் நீர் வற்றி விடும் அபாயம் உள்ளதால், கோடைக்காலத்தில் கால்நடைகள் நீர் இன்றி மிகுந்த சிரமத்தை அனுபவிக்கும்.

எனவே. நீர் இருப்பை பாதுகாக்க ஓடை கால்வாய் பகுதியில் வளர்ந்துள்ள கோரைப்புற்களை அகற்றி, கால்வாயை சீரமைக்க, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement