சட்டவிரோதமாக தங்கிய 16 வங்கதேசத்தினர் கைது
மும்பை, மஹாராஷ்டிராவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த, 16 வங்கதேசத்தினரை பயங்கரவாத எதிர்ப்பு படையினர் அதிரடியாக கைது செய்தனர்.
மஹாராஷ்டிராவில், நம் அண்டை நாடான வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் சட்டவிரோதமாக தங்கியிருப்பதாக ஏ.டி.எஸ்., எனப்படும் பயங்கரவாத எதிர்ப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து கடந்த 24 மணி நேரத்தில் உள்ளூர் போலீசார் உதவியுடன் ஏ.டி.எஸ்., அமைப்பினர் நவிமும்பை, தானே, சோலாப்பூர் ஆகிய இடங்களில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு சட்ட விரோதமாக தங்கிருந்த ஏழு ஆண்கள், ஆறு பெண்களை கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து ஆதார் உள்ளிட்ட ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் வெளிநாட்டினர் சட்டத்தின் கீழ் அவர்கள் மீது மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இதேபோல், ஜால்னா மாவட்டத்தின் போகர்தான் பகுதியில் உள்ள கிரஷர் இயந்திரங்களில் பணியாற்றிய மூன்று வங்கதேசத்தினர் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் நம் நாட்டில் தங்குவதற்காக சட்டவிரோதமாக போலி ஆவணங்களை தயாரித்து கடந்த இரண்டு ஆண்டுகளாக இங்கு பணியாற்றியது தெரியவந்துள்ளது.
இவர்கள் மீது வெளிநாட்டினர் சட்டம் மற்றும் பாரதிய நியாய் சன்ஹிதா ஆகிய சட்டங்களின் கீழ் வழக்குபதிந்து போலீசார் விசாரிக்கின்றனர்.