ராமேஸ்வரத்தில் ரூம், ஆட்டோ கட்டணம் இரு மடங்கு உயர்வு: பக்தர்கள் கூட்டத்தை பயன்படுத்தி வசூல்

ராமேஸ்வரம்,: ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்திற்கு தொடர் விடுமுறையால் அதிகளவில் வரும் பக்தர்கள் கூட்டத்தை பயன்படுத்தி தங்கும் விடுதிகளில் அறைகள், ஆட்டோ கட்டணங்களை உரிமையாளர்கள் இரு மடங்கு உயர்த்தியுள்ளனர்.

தமிழகத்தில் பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு முடிந்து தொடர் விடுமுறை விடப்பட்டதால் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு தினமும் ஏராளமான வாகனங்களில் பக்தர்கள் வருகின்றனர்.

இதனால் பஸ் ஸ்டாண்ட் முதல் கோயில் வரை போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

இக்கூட்டத்தை பயன்படுத்தி ராமேஸ்வரத்தில் சில தங்கும் விடுதிகளை தவிர 90 சதவீதம் விடுதிகள் மற்றும் அரசு அனுமதி இன்றி விடுதியாக மாற்றப்பட்ட வீடுகளின் உரிமையாளர்கள், அறைகள் காலி இல்லை என்பதுபோல் மாயை உருவாக்கி இரு மடங்கு கட்டணங்களை உயர்த்தியுள்ளனர்.

அதாவது டபுள்பெட் அறை ரூ.4000 முதல் 6000 வரை (பழைய கட்டணம் ரூ. 1500 முதல் ரூ.2000) அடாவடியாக வசூலிக்கப்படுகிறது.

வடை ரூ.20



ராமேஸ்வரம் பஸ் ஸ்டாண்ட் முதல் கோயில் மேலவாசல் வரை (2 கி.மீ.,) ஆட்டோ கட்டணம் ரூ.100 வசூலித்த நிலையில் தற்போது ரூ.200 முதல் 300 வரை வசூலிக்கின்றனர்.

ஓட்டல்களில் ஒரு உளுந்தம்பருப்பு வடை ரூ.12 முதல் 14 வரை விற்ற நிலையில், தற்போது பக்தர்கள் கூட்டத்தை பயன்படுத்தி கோயில் கிழக்கு ரதவீதியில் வடை ரூ. 20க்கு விற்கப்படுகிறது.

இதனை தடுக்காமல் அதிகாரிகள் வேடிக்கை பார்ப்பதாகவும், கட்டணங்கள் மேலும் உயர வாய்ப்பு உள்ளதாகவும் பக்தர்கள் வேதனை தெரிவித்தனர்.

Advertisement