நகருக்குள் நடமாடிய காட்டு யானைகளால் கடைகள் சேதம்

மூணாறு : மூணாறைச் சுற்றி நேற்று முன்தினம் இரவு படையப்பா உள்பட பல்வேறு காட்டு யானைகள் அச்சம் ஏற்படும் வகையில் நடமாடின.

மூணாறு பகுதியில் நடமாடும் பிரபல படையப்பா ஆண் காட்டு யானை அவ்வப்போது நகருக்குள் வந்து செல்வதுண்டு.

அந்த யானை கடந்த இரண்டு நாட்களாக நகரில் இருந்து ஒரு கி.மீ.தொலைவில் உள்ள டி.எஸ்.பி., குடியிருப்பு அருகே காட்டிற்குள் முகாமிட்ட நிலையில், நேற்று முன்தினம் இரவு 9:15 மணிக்கு நகரில் பெரியவாரை ஜீப் ஸ்டாண்ட் அருகே ரோட்டில் வந்தது.

அப்போது அந்த வழியில் சென்ற சுற்றுலா பயணிகள் வாகனங்கள் உள்பட அனைத்து வாகனங்களும் கடந்து செல்ல இயலாமல் அணிவகுத்து நின்றன. யானையை நகருக்குள் நுழைய விடாமல் சிலர் தடுத்து காட்டிற்குள் விரட்டினர்.

கடைகள் சேதம்: மூணாறு அருகே கூடாரவிளை எஸ்டேட் பாக்டரி டிவிஷன் பகுதியில் முகாமிட்ட ஆறு யானைகளை கொண்ட கூட்டம், அங்கு பயணிகள் நிழற்குடை கட்டடம், அதன் அருகில் உள்ள வினோத், வேல்ராஜ் ஆகியோரின் மளிகை கடை ஆகியவற்றை அதிகாலை 12:15 மணிக்கு சேதப்படுத்தின.

தேவிகுளம் வனத்துறை அதிரடி படையில் அப்பகுதியில் நேற்று காலை 7:00 மணி வரை முகாமிட்டு யானைகளை காட்டிற்குள் விரட்டினர்.

தப்பிய தொழிலாளர்கள்: மூணாறு அருகே கன்னிமலை எஸ்டேட் டாப் டிவிஷனில் நேற்று காலை பெண் தொழிலாளர்கள் வழக்கம் போல் அப்பகுதியில் உள்ள 15ம் எண் தேயிலை தோட்டத்திற்கு தேயிலை பறிக்க சென்றனர். அப்போது அப்பகுதியில் நான்கு காட்டு யானைகள் முகாமிட்டு இருந்ததை பார்த்து வேறு பகுதிக்கு பணிக்கு சென்றதால் தப்பினர்.

Advertisement