திருவள்ளுவர் சிலை இனி பேரறிவு சிலை: ஸ்டாலின்

2

சென்னை: 'பல நுாற்றாண்டுகள் நிலைத்து நிற்க இருக்கும், கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலைக்கு, 'பேரறிவு சிலை' என பெயர் சூட்டு விழா நடக்க உள்ளது' என, முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தி.மு.க., தொண்டர்களுக்கு, முதல்வர் ஸ்டாலின் எழுதியுள்ள கடிதம்:

திருக்குறளை எழுதிய திருவள்ளுவர், தமிழர்களின் உலக அடையாளமாக திகழ்கிறார். திருக்குறளுக்கும், திருவள்ளுவருக்கும், உலகளாவிய புகழ் சேர்க்கும் வகையில், முக்கடல் சங்கமிக்கும் குமரி முனையில், திருவள்ளுவர் சிலையை கருணாநிதி நிறுவினார்.

வானுயர வள்ளுவர் சிலை திறக்கப்பட்ட அந்த நொடியில், அத்தனை பேரும் மெய் சிலிர்த்து நின்றோம்.

அதிசயிக்கின்றனர்



கடல் நடுவே கம்பீரமாக உயர்ந்து நிற்கும் சிலையை காண, உள்நாட்டில் இருந்தும், வெளிநாட்டில் இருந்தும், சுற்றுலா பயணிகள் வருகின்றனர். அண்ணாந்து பார்த்து அதிசயிக்கின்றனர். படகில் ஏறி சிலை உள்ள பாறைக்கு சென்று, முழுமையாக கண்டு களிக்கின்றனர். சுனாமி தாக்கிய போதும், எந்த சேதாரமும் இன்றி, கம்பீரமாக சிலை நிற்கிறது.

சிலை திறக்கப்பட்டு, 25 ஆண்டுகள் முடிந்துள்ளது. கால் நுாற்றாண்டு கடந்து, இன்னும் பல நுாற்றாண்டுகள் நிலைத்து நிற்க இருக்கும் சிலைக்கு, 'பேரறிவு சிலை' என, பெயர் சூட்டி தி.மு.க., அரசு மகிழ்கிறது. திருக்குறளையும், திருவள்ளுவரையும் தி.மு.க., எப்போதும் போற்றி வருகிறது.

கண்ணாடி பாலம்



திருவள்ளுவரை இளம் தலைமுறை தமிழர்கள் போற்றிடும் வகையில், பேரறிவு சிலையின் வெள்ளி விழா, கன்னியாகுமரியில் இன்று முதல் ஜன., 1ம்தேதி வரை நடைபெற உள்ளது. வெள்ளி விழாவின் அடையாளமாக, வள்ளுவர் சிலை அமைந்துள்ள பாறைக்கும், அருகேயுள்ள விவேகானந்தர் மண்டபம் அமைந்துள்ள பாறைக்கும் இடையே, கண்ணாடி பாலம் அமைக்கப்பட்டு திறக்கப்படுகிறது.

கடல் நடுவே கண்ணாடி பாலம் என்பது, இந்தியாவிலேயே இது தான் முதல் முறை. இந்த கண்ணாடி பாலப்பணியை அமைச்சர் வேலு திறம்பட நிறைவேற்றி உள்ளார். இதன் வழியே, சுற்றுலா பயணியர் இரு இடங்களுக்கும் எளிதாக சென்று வர முடியும். உயர்ந்து நிற்கும் திருவள்ளுவர் சிலை போல், தமிழகமும், தமிழர்களும் நாளும் உயர வேண்டும்.

இவ்வாறு கடிதத்தில் கூறியுள்ளார்.

Advertisement