பதுங்கு குழிகள் மணிப்பூரில் அழிப்பு

இம்பால், மணிப்பூரில் ஊடுருவல்காரர்கள் பயன்படுத்திய நான்கு பதுங்கு குழிகளை கண்டறிந்து, பாதுகாப்புப் படையினர் அழித்தனர்.

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் முதல்வர் பைரேன் சிங் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது.

இங்கு, கூகி -- மெய்டி பிரிவினரிடையே கடந்த ஆண்டு மே மாதம் இனக்கலவரம் வெடித்தது. அதன்பின் இயல்பு நிலை திரும்பி வந்த நிலையில், அவ்வப்போது தாக்குதல்கள் அரங்கேறி வருகின்றன.

இதுபோன்ற தாக்குதல் சம்பவங்களுக்கு, நம் அண்டை நாடான மியான்மரில் இருந்து வரும் ஊடுருவல்காரர்கள் தான் காரணம் என, மாநில அரசு குற்றஞ்சாட்டி வருகிறது.

இம்பால் கிழக்கு மற்றும் காங்போக்பி மாவட்டங்களில் பாதுகாப்புப் படையினர் மீது, ஊடுருவல்காரர்கள் சமீபத்தில் தாக்குதல் நடத்தினர். இதில், போலீசார் உட்பட நான்கு பேர் படுகாயமடைந்தனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் முதல், இரு மாவட்டங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் பாதுகாப்புப் படையினர் தீவிர சோதனை நடத்தினர். அப்போது, சட்டவிரோதமாக பதுங்கு குழிகள் தோண்டப்பட்டதை கண்டறிந்து அழித்தனர்.

இவற்றை, ஊடுருவல்காரர்கள் பயன்படுத்தி இருக்கக்கூடும் என்பதால், அப்பகுதிகளில் தங்கள் சோதனையை பாதுகாப்புப் படையினர் தீவிரப்படுத்தி உள்ளனர்.

Advertisement