ஒகேனக்கல் குடிநீர் வழங்காமல் புறக்கணிப்பு அடிப்படை வசதிக்கு ஏங்கும் தா.நடூர் கிராமம்

பாப்பிரெட்டிப்பட்டி, ஜன. 3---
தர்மபுரி மாவட்டம், கடத்தூர் ஒன்றியம் தாளநத்தம் ஊராட்சியில் குண்டலபட்டி காவேரிபுரம், செங்கன்கொட்டாய், நடூர், கோவில்வளம், நொச்சிக்குட்டை, டி. அய்யம்பட்டி, காவேரிபுரம் புதூர் என, எட்டு கிராமங்கள் உள்ளன. இதில் தா.நடூர் பகுதியில், 100க்கும் மேற்பட்ட ஒரு பிரிவினர் வசிக்கின்றனர். இவர்கள் கூலி தொழில் செய்து வருகின்றனர். இவர்களுக்கு கல்வி, சுகாதாரம், குடிநீர் என்பது கேள்வி குறியாக உள்ளது.
தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்கள் புளோரைடு இல்லாத தண்ணீர் குடிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு கடந்த, 2013ல் ஒகேனக்கல் குடிநீர் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது. தொடங்கிய நாள் முதல் இன்று வரை இந்த பகுதியில் வாழ்பவர்களுக்கு, ஒகேனக்கல் குடிநீர் வழங்காமல் அரசு புறக்கணித்து வருகிறது. இம்மக்கள் குடிநீரை விலை கொடுத்து வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.
தாளநத்தம், டி.அய்யம்பட்டி ஆகிய கிராமங்களுக்கு ஒகேனக்கல் குடிநீர் செல்கிறது. இந்த, இரு கிராமத்திற்கிடையில் உள்ள நடூர் பகுதி மட்டும் புறக்கணிக்க பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஒகேனக்கல் குடிநீர் வழங்க கட்டபட்ட மேல்நிலை குடிநீர் தொட்டி காட்சி பொருளாக உள்ளது. இந்த குடிநீர் தொட்டிக்கு தாளநத்தம் கிராமத்தில் இருந்து குடிநீர் குழாய் அமைத்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு குடிநீர் ஏற்றினால். அப்பகுதி மக்களின் குடிநீர் பிரச்னை தீரும்.
ஆனால் கடந்த, 12 ஆண்டுகளாக இதற்காக எந்த ஒரு நடவடிக்கையும் அரசும், அதிகtரிகளும் எடுக்கவில்லை. தொடர்ந்து புளோரைடு கலந்த தண்ணீரை குடித்து வரும் இம்மக்களுக்கு ஒகேனக்கல் குடிநீர் வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement