தோழிக்கு மிரட்டல் விடுத்த நண்பனை சுத்தியலால் அடித்து கொன்ற சிறுவன்

மீரட், உத்தர பிரதேசத்தில் அந்தரங்க புகைப்படங்கள், வீடியோக்களை வைத்து தோழிக்கு மிரட்டல் விடுத்த நெருங்கிய நண்பரை, சுத்தியலால் அடித்து கொன்ற 17 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர்.

புகைப்படங்கள்



உத்தர பிரதேச மாநிலம் மீரட்டைச் சேர்ந்தவர் அபினவ், 16, அங்குள்ள பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார்.

இவரது வீட்டருகே, அதே பள்ளியில் பிளஸ் 2 படிக்கும் 17 வயது மாணவர் வசித்து வந்தார்.

நண்பர்களாக பழகி வந்த இருவரும், பொறியியல் படிப்பு நுழைவுத்தேர்வுக்காக 15 கி.மீ., தொலைவில் உள்ள தனியார் பயிற்சி மையத்திற்கு பைக்கில் சென்று வந்தனர்.

இருவரும், பயிற்சி மையத்திற்கு கடந்த 28ம் தேதி பைக்கில் சென்றனர். ஆனால், பயிற்சி வகுப்பு முடிந்து அபினவ் வீடு திரும்பாததால், அவரது பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் விசாரணை நடத்தினர்.

சம்பவத்தன்று, அபினவும், அச்சிறுவனும் பைக்கில் ஒன்றாக சென்றது, கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருப்பதை போலீசார் உறுதிப்படுத்தினர். இதையடுத்து, அந்தச் சிறுவனை பிடித்து விசாரணை நடத்தியதில், அபினவை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

போலீசார் விசாரணையில், தன் தோழியின் மொபைல் போனில் இருந்த சில அந்தரங்க புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை, அவருக்கு தெரியாமல் அபினவ் தன் மொபைல் போனிற்கு மாற்றியதுடன், தொடர்ந்து மிரட்டல் விடுத்துள்ளார்.

கைது



இதுதொடர்பாக, நடந்த விபரங்களை தன்னிடம் தோழி தெரிவித்ததால், அபினவை கொல்ல திட்டம் தீட்டினார்.

கடந்த 28ம் தேதி, பயிற்சி வகுப்புக்கு ஒன்றாக பைக்கில் சென்றபோது, தன் பையில் மறைத்து வைத்திருந்த சுத்தியலால், அபினவை அடித்து கொன்றதாக தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து, அச்சிறுவனை கைது செய்த போலீசார், அவர் மறைத்து வைத்திருந்த அபினவின் உடலையும், கொல்ல பயன்படுத்திய சுத்தியலையும் கைப்பற்றினர். அதன்பின், அபினவின் உடலை அவரது குடும்பத்தினரிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

Advertisement