பூசாரிகளுக்கு மாதம் ரூ.18,000 கெஜ்ரிவாலின் அடுத்த அறிவிப்பு

12

புதுடில்லி,
“டில்லியில் உள்ள கோவில்களில் பணியாற்றும் பூசாரிகள் மற்றும் குருத்வாராக்களில் பணியாற்றும் கிராந்தி ஆகியோருக்கு மாதந்தோறும், 18,000 ரூபாய் கவுரவத் தொகை வழங்கும் புதிய திட்டத்தை அமல்படுத்துவோம்,” என, டில்லியில் ஆளும் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

ஊக்கத்தொகை



டில்லியில், முதல்வர் ஆதிஷி தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி அமைந்துள்ளது. மதுபான ஊழல் வழக்கில் சிறைக்கு சென்ற அரவிந்த் கெஜ்ரிவால், ஜாமினில் வெளியே வந்தார்.

பதவியை கெஜ்ரிவால் ராஜினாமா செய்ததால், ஆதிஷி முதல்வரானார். சட்டசபைக்கு விரைவில் நடக்க உள்ள தேர்தலில் மீண்டும் வென்று ஆட்சி அமைத்தால் தான் முதல்வராக பதவி ஏற்பேன் என, அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

எந்த நேரத்திலும் தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என்ற நிலையில், தகுதியுள்ள பெண்களுக்கு மாதம், 2,100 ரூபாய் ஊக்கத்தொகை, 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவச மருத்துவ சிகிச்சை என, பல இலவச அறிவிப்புகளை கெஜ்ரிவால் வெளியிட்டு வருகிறார்.

அத்துடன், இதற்கான விண்ணப்பங்களை ஆம் ஆத்மி பெற்று வருகிறது; இது சர்ச்சையை ஏற்படுத்தியது. இல்லாத திட்டங்களுக்கு தகவல்கள் திரட்டப்படுவதாக, டில்லி அரசின் துறைகளே விளம்பரங்களை வெளியிட்டன.

மேலும், மக்களிடம் தகவல்களை திரட்டுவது, மோசடிகளுக்கு வழிவகுக்கும் என, காங்கிரஸ் புகார் கூறியுள்ளது.

அது தொடர்பாக விசாரிக்கும்படி, டில்லி துணைநிலை கவர்னர் சக்சேனா ஏற்கனவே உத்தரவிட்டுஉள்ளார்.

இந்நிலையில், டில்லியில் நேற்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பின்போது, “கோவில்களில் பணியாற்றும் பூசாரிகள் மற்றும் குருத்வாராக்களில் பணியாற்றும் கிராந்தி ஆகியோருக்கு மாதந்தோறும், 18,000 ரூபாய் கவுரவ ஊக்கத் தொகை வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவோம்,” என, அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்து உள்ளார்.

ஏமாற்றும் வேலை



“நாட்டு மக்களின் கோரிக்கைகளை கடவுளிடம் கொண்டு சேர்க்கும் மிகப்பெரும் சேவையில், பரம்பரை பரம்பரையாக பூசாரிகள் ஈடுபட்டுள்ளனர். ஆனால், தங்கள் குடும்பம் குறித்து அவர்கள் கவலைப்பட்டதில்லை.

''அதனால், அவர்களைப் பற்றி நாங்கள் கவலைப்படுகிறோம். அவர்களை கவுரவிக்கும் வகையில், இந்த திட்டம் செயல்படுத்தப்படும்,” என, கெஜ்ரிவால் குறிப்பிட்டார்.

“இதுபோன்ற திட்டத்தை, நாட்டிலேயே முதல் முறையாக அறிவித்துள்ளதற்காகவே கெஜ்ரிவாலை பாராட்ட வேண்டும்,” என, ஆம் ஆத்மி மூத்த தலைவரும், முன்னாள் துணை முதல்வருமான மணீஷ் சிசோடியா கூறியுள்ளார்.

“பூசாரிகள் மற்றும் கிராந்திகளுக்கு உரிய சம்பளத்தை வழங்க வேண்டும் என, பா.ஜ., நீண்ட காலமாக வலியுறுத்தி வருகிறது. கடந்த 10 ஆண்டு கால ஆட்சியில், மசூதிகளில் பணியாற்றுவோருக்கு சம்பளத்தை வழங்கி வந்துள்ளது ஆம் ஆத்மி.

''ஆனால், தற்போது தேர்தல் நடக்க உள்ளது என்பதால், பூசாரிகளுக்கு கவுரவத் தொகை திட்டத்தை அறிவித்துள்ளது. இது ஏமாற்றும் வேலை,” என, பா.ஜ.,வின் பர்வேஷ் சாஹிப் சிங் கூறியுள்ளார்.

Advertisement