நித்யஸ்ரீ குரலுக்கு ஓயாத கைத்தட்டல்



பிரபல கர்நாடக இசை கலைஞர் நித்யஸ்ரீ மஹாதேவனின் கச்சேரி, 'ரசிகா பைன் ஆர்ட்ஸ்' ஏற்பாடில், மேற்கு மாம்பலத்தில் நடந்தது.

துவக்கத்தில், 'ஸரஸுட' என்ற சாவேரி ராக வர்ணத்தை பாடி, இனிமையாக கச்சேரியை துவக்கினார்.

அடுத்து, ருக்மணி ரமணி இயற்றிய, 'ஜெய மாருதி' கீர்த்தனையை, நாட்டை ராகத்தில் அமைத்து, கச்சேரியை விறுவிறுப்பாக்கினார்.

பின் தியாகராஜர் இயற்றிய, 'தெலிஸிராம' கீர்த்தனையை, பூர்ணசந்த்ரிகா ராகம், ஆதி தாளத்தில் வழங்கினார். இதை கேட்பதற்கே ரம்மியமாக இருந்தது. ராகங்களை அழகுற வழங்கும் நித்யஸ்ரீ திறமைக்கு, கைத்தட்டல்கள் ஒலித்தன.

இதையடுத்து, ரஞ்சனி ராகத்தை திறம்பட பாடினார். வயலின் கலைஞர் பரூர் கிருஷ்ணசாமி, தன் அனுபவத்தை வெளிப்படுத்தி சிறப்பு சேர்த்தார்.

அடுத்து, தியாகராஜரின் 'துர்மார்க சரா' என்ற கீர்த்தனையை பாடி, ஸ்வரங்களை தோரணமாக அமைத்தார்.

தனி ஆவர்த்தனத்தில், மிருதங்கத்தில் காருக்குறிச்சி மோகனராம், கடத்தில் திருச்சி கிருஷ்ணசாமியும் சிறப்பாக வாசித்து, கச்சேரியை திறம்பட மேம்படுத்தினர்.

தொடர்ந்து, புரந்தரதாஸர் இயற்றிய, 'தம்பூரி மீட்டிவா' கீர்த்தனையை, சிந்து பைரவி ராகம் அமைத்து பாடியது, அரங்கில் அமர்ந்திருந்த ஒருவரின் தலையை மட்டுமல்லாது, உடலையும் சேர்த்து ஆட்டிவைத்தது, நித்யஸ்ரீயின் பக்தி மணம் வீசிய குரல்.

அடுத்து, ராமநாதத்தை விளக்கும் அற்புதமான பஜன் பாடி, பக்தி பரவசத்தில் ரசிகர்களை திக்குமுக்காடச் செய்தார் நித்யஸ்ரீ.

இறுதியாக, ஹரிகேசநல்லுார் முத்தையா பாகவதர் இயற்றிய, தில்லானாவை, தர்பாரி கானடா ராகத்தில் பாடி, நிகழ்ச்சியை நிறைவு செய்தார். தனித்துவமான குரலால் அரங்கை தன் வசப்படுத்தி, ரசிகர் கூட்டத்தை கடைசி வரை கட்டுக்குள் வைத்திருக்கும் நுணுக்கம், நித்யஸ்ரீ மஹாதேவனுக்கே உரியது.



- நமது நிருபர் -

Advertisement