5 இடங்களில் வளைவுகளுடன் அமையும் மெட்ரோ ரயில் பாதை குடியிருப்புகள் இடிப்பது தவிர்ப்பு

சென்னை, சென்னை இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், குடியிருப்புகள் அதிகமாக இருக்கும் ஐந்து இடங்களில், கட்டிடங்கள் இடிப்பதை தவிர்த்து பிரமாண்ட வளைவுகளுடன் மேம்பால பாதைகள் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.

சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், மாதவரம் - சிப்காட், மாதவரம் - சோழிங்கநல்லுார், கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி சாலை என மூன்று வழித்தடங்களில், 116 கி.மீ., துாரத்துக்கு, 61,843 கோடி ரூபாயில் மெட்ரோ திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன.

மொத்தம் 126 மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன. இவற்றில், 46 மெட்ரோ ரயில் நிலையங்கள் சுரங்கப்பாதையில் அமைகின்றன. இதற்கான, 100க்கும் மேற்பட்ட நிறுவனங்களுக்கு பணி ஆணைகள் வழங்கப்பட்டு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

குடியிருப்புகள், அலுவலக கட்டிடங்கள் அதிகமாக இருக்கும் இடங்களில் ஆய்வு செய்து, அங்கு வளைவுகளுடன் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:

இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் 76 கி.மீ., மேம்பால பாதையிலும், 42 கி.மீ., சுரங்கப்பாதையிலும் அமைக்கும் பணிகள் முழு வீச்சில் நடக்கின்றன.

குடியிருப்புகள் அதிகமாக இருக்கும் இடங்களில், அங்குள்ள கட்டிடங்களை இடிப்பதை தவிர்த்து, மாற்று வழியில் செயல்படுத்த ஆலோசனை நடத்தப்பட்டது. அதன்படி, தேவையான இடங்களில் மெட்ரோ ரயில் பாதையில் வளைவுகளுடன் அமைக்கப்பட்டு வருகின்றன.

சாலிகிராமம், அவிச்சி பள்ளி சந்திப்பு, போரூர் சந்திப்பு, குமணன்சாவடி, பூந்தமல்லி ஆகிய இடங்களில், வளைவுகளுடன் மெட்ரோ ரயில் மேம்பால பாதை அமைக்கப்படுகிறது. 120 மீட்டர் முதல் 500 மீட்டருக்கு இந்த வளைவுகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதற்காக உறுதி தன்மையுடன் பிரத்யேக ஸ்டீல் பயன்படுத்தப்படுகிறது. இது, சவாலான பணியாக உள்ளது.

சென்னையில் தான் இதுபோன்ற அதிக வளைவுகளுடன், மேம்பால மெட்ரோ ரயில் பாதை அமைகிறது.

பணிகள் முடித்து, இந்த ஆண்டு இறுதி முதல் படிப்படியாக மெட்ரோ ரயில் சேவை துவங்கும். அனைத்து மேம்பால மெட்ரோ பணிகளும் 2026ல் முடிக்கப்படும். இரண்டாம் கட்ட மொத்த மெட்ரோ பணிகளும் வரும் 2029ல் முடிக்க உள்ளோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement