டாக்டர்கள் நியமிக்கக்கோரி காத்திருப்பு போராட்டம்
தொண்டி: தொண்டி அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் கூடுதல் டாக்டர்கள் நியமிக்கக் கோரி மக்கள் நலப் பணிக்குழு சார்பில் காத்திருப்பு போராட்டம் நடந்தது.
தொண்டியில் அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இங்கு ஒரு டாக்டர் மட்டுமே இருப்பதால் நோயாளிகளுக்கு போதிய சிகிச்சை கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். எனவே கூடுதல் டாக்டர்களை நியமிக்க வேண்டும். அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்தி காலியாக உள்ள இடத்தில் மருத்துவமனையை விரிவுபடுத்த வேண்டும்.
ஆம்புலன்ஸ் 108 சேவை வேண்டும். தொண்டி பேரூராட்சியில் நிரந்தர செயல் அலுவலர் நியமிக்க வேண்டும். நீர் நிலைகள் பராமரிப்பு இல்லாமல் சாக்கடையாக மாறிவிட்டது. அனைத்து குளங்களையும் சுத்தம் செய்ய வேண்டும். தொண்டியில் கஞ்சா புழக்கம் அதிகமாக உள்ளது.
போதைப்பொருள் புழக்கத்தை போலீசார் தடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆரம்ப சுகாதார நிலையம் எதிரில் காத்திருப்பு போராட்டம் நடந்தது.
அ.தி.மு.க., மனிதநேய மக்கள் கட்சி, தமிழக மக்கள் ஜனநாயக கட்சி, எஸ்.டி.பி.ஐ., போன்ற கட்சிகள் ஆதரவுடன் நடந்த இந்த போராட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.