எரிந்த நிலையில் மண்டை ஓடு நெய்வேலியில் திடீர் பரபரப்பு

நெய்வேலி : நெய்வேலி நகரில் சாலையோரம் எரிந்த நிலையில் மண்டை ஓடு மற்றும் கை, கால் எலும்புகள் கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கடலுார் மாவட்டம், நெய்வேலி டவுன்ஷிப் வட்டம் 16ல் உள்ள ஜம்பு லிங்க முதலியார் சிலை அருகே, ஒரு வீட்டின் முன்பு எரிந்த நிலையில் மனித மண்டை ஓடு மற்றும் கை, கால் எலும்புகள் கிடந்தன.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த நெய்வேலி டவுன்ஷிப் போலீசார், அந்த வீட்டில் வசிக்கும் ஸ்ரீநாத் என்பவரிடம் விசாரித்தனர்.

அதில், ஸ்ரீநாத் என்.எல்.சி., சுரங்கத்தில் துணை முதன்மை மேலாள ராக பணியாற்றி வருவதும் அந்த வீட்டில் சில தினங்களுக்கு முன்புதான் குடியேறியதும் தெரியவந்தது.

வீட்டை வேலையாட்கள் முலமாக சுத்தம் செய்து, குப்பைகளை சாலையோரம் போட்டதாகவும், நேற்று காலை அந்த குப்பைகளை எரித்ததாகவும் கூறினார்.

இதையடுத்து, அந்த வீட்டில் இவருக்கு முன்பு வசித்த முரளிதரன், 61; என்ற என்.எல்.சி., முன்னாள் அதிகாரியிடம் தொலை பேசி வாயிலாக போலீசார் விசாரணை நடத்தினர்.

அதில், முரளிதரன் ஓய்வு பெற்றதால் வீட்டை காலி செய்ததும், அவரது மகள் விஷ்வரூபா. 24. கடந்த ஆண்டு எம்.பி.பி.எஸ்., முடித்து விட்டு, தற்போது முதுநிலை மருத்துவம் (எம்.டி.,) படித்து வருவதாகவும் கூறினார்.

மேலும், அந்த மண்டை ஓடு மற்றும் கை, கால் எலும்புகள் உண்மையானது அல்ல. தனது மகளின் மருத்துவப் படிப்பு தொடர்பாக பயன்படுத்திய செராமிக் பொருட்களால் ஆன போலியான மனித உறுப்புகள் என கூறினார்.

இருப்பினும் டவுன்ஷிப் போலீசார் அந்த மண்டை ஓடு மற்றும் எலும்புகளை ஆய்வக சோதனைக்காக எடுத்து சென்றனர்.

இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சற்று பரபரப்பு நிலவியது.

Advertisement