சர்க்கரை ஆலையில் தாமதம்: வெயிலில் காயும் கரும்புகள்
அரூர்: வெட்டப்பட்ட கரும்புகளை எடுத்துச் செல்ல சர்க்கரை ஆலை நிர்வாகம் தாமதிப்பதால், கரும்புகள் வெயிலில் காய்ந்து வருவதாக, விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த கோபாலபுரம், சுப்ரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலையில், நடப்பாண்டுக்கான, கரும்பு அரவை கடந்த, 28ல் துவங்கியது. இந்நிலையில் வெட்டப்பட்ட கரும்புகளை ஏற்றிச் செல்ல வாகனங்கள் வராததால் கரும்புகள் வெயிலில் காய்ந்து வருகின்றன; விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
இது குறித்து விவசாயிகள் கூறியதாவது: ஏற்கனவே, வறட்சி மற்றும் வேர்ப்புழு நோய் தாக்குதலால் கரும்புகள் காய்ந்துள்ளன. மேலும், நடவு செய்து, 13 மாதங்களுக்கு மேலாகியும் உரிய பருவத்தில் கரும்புகள் வெட்டப்படாததால், கரும்பு பயிர்கள் பூத்து குலுங்குகின்றன. இதனால், கரும்பின் எடை குறைந்து, விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படும். குறித்த காலத்தில் ஆலையில் அரவை துவங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்தும் நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை. கடந்த, 28ல் ஆலையில், அரவை துவங்கப்பட்டதாக கூறிய போதிலும், போதிய முன்னேற்பாடு இல்லாததால் கரும்பு அரவை நடக்கவில்லை. இதனால், கடந்த, 4 நாட்களாக, தோட்டங்களிலிருந்து, லாரி, டிராக்டர், டிப்பர் உள்ளிட்ட, 60க்கும் மேற்பட்ட வாகனங்களில் அரவைக்கு கொண்டு வந்த, கரும்புகளை இறக்க முடியாமல், ஆலை வளாகத்தில் காய்ந்து வருகின்றன. அதேபோல், வெட்டப்பட்ட கரும்புகளை ஏற்றிச் செல்ல சர்க்கரை ஆலை நிர்வாகம் தாமதிப்பதால், வயலில் வெயிலில் காய்ந்து வருகின்றன. விவசாயிகளுக்கு பல ஆயிரம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே, உரிய இழப்பீடு வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
இது குறித்து ஆலையின் மேலாண்மை இயக்குனர் பிரியாவிடம் கேட்ட போது, ''அரவை துவங்கிய, 28ல் மழை வந்ததால், விவசாயிகள் யாரும் கரும்பு வெட்ட மாட்டோம் என, கூறி விட்டனர். நேற்றிரவு முதல் அரவை துவங்கப்பட்டது. இன்று, முதல், கரும்பு ஏற்றி வர வாகனங்கள் செல்லும். விவசாயிகள் ஆதங்கப்பட்டு முன்கூட்டியே கரும்பு வெட்டினால் நாங்கள் என்ன செய்ய முடியும்,'' என்றார்.