பெண்ணுக்கு பாலியல் தொல்லை; போலீஸ் இன்பார்மருக்கு சிறை
பாப்பாரப்பட்டி: ஏரிமலை இருளர் காலணியில் சி.ஐ.டி., போலீஸ் என்று கூறி, பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த போலீஸ் இன்பார்மர் சிறையில் அடைக்கப்பட்டார்.
பென்னாகரம் வட்டம், வட்டுவன அள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட ஏரிமலை இருளர் காலணியில் சி.ஐ.டி., போலீஸ் எனக்கூறி, விவசாயியை லத்தியால் தாக்கி, பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த போலீஸ் இன்பார்மர்கள் இருவரில், ஒருவரான ஜெய்கணேஷ், 49, என்பவரை கிராம மக்கள் பிடித்து பாப்பாரப்பட்டி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
மற்றொருவர் தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து, பாதிக்கப்பட்ட பெண் பாப்பாரப்பட்டி போலீசில் புகார் கொடுத்தார். கூடுதல் எஸ்.பி., பாலசுப்பிரமணி, பென்னாகரம் டி.எஸ்.பி., மகாலட்சுமி, கலால் டி.எஸ்.பி., பாஸ்கர் ஆகியோர் விசாரணை நடத்தினர். பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாலக்கோடு ரயில்வே ஸ்டேஷன் பகுதியை சேர்ந்த ஜெய்கணேஷ்,49, கக்கன்ஜிபுரம் கிராமத்தை சேர்ந்த சத்தி ஆகியோர் மீது கொலை முயற்சி, ஆள்மாறாட்டம், பாலியல் தொல்லை உள்ளிட்ட, ஐந்து பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஜெய்கணேஷ் பாப்பாரப்பட்டி போலீசாரால் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், தப்பியோடிய சக்தியை தேடி வருகின்றனர். ஜெய்கணேசை தாக்கியதாக, ஏரிமலை கிராமத்தை சேர்ந்த, 10 பேர் மீது, போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.