பகல்பத்து உற்சவம் நேற்று துவங்கியது திவ்யபிரபந்தம் பாராயணமும் ஒலித்தது
கோவை : பெரிய கடைவீதியிலுள்ள கெரடி கோவிலில், மார்கழி மாத வைகுண்ட ஏகாதசிக்கு முன்னதாக நேற்று, பகல்பத்து உற்சவம் துவங்கியது.
லட்சுமி நாராயண வேணுகோபாலசுவாமி கோவில் என்றழைக்கப்படும், கெரடி கோவிலில் வழக்கமான மார்கழி பூஜைகளை தொடர்ந்து, நேற்று காலை உற்சவர் கஸ்துாரி ரங்கர் சிறப்பு அலங்காரத்தில், கோவில் மண்டபத்தில் எழுந்தருளுவிக்கப்பட்டார்.
தொடர்ந்து, ஆழ்வார்களும் கோவில் மண்டபத்தில் எழுந்தருளுவிக்கப்பட்டனர். அப்போது கோவில் கொங்கிலாச்சான் அப்பன்னாசாரி ஸ்வாமிகள் உள்ளிட்ட பாகவத கோஷ்டியினரின், வேதகோஷ முழக்கங்களும் சாற்றுமறை பாராயணமும் நடந்தன.
அப்போது, ஆழ்வார்களுக்கு மரியாதை செய்யப்பட்டது. வரும் 9ம் தேதி வரை, நாலாயிர திவ்யபிரபந்த சேவாகாலத்துடன் பகல் பத்து உற்சவம் நடக்கிறது. வரும் 10ல் வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது.
அப்போது உற்சவர் கஸ்துாரி ரங்கர், ஸ்ரீதேவி பூதேவி சமேதராக சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிப்பார். அன்று முதல் தொடர்ந்து பத்து நாட்களுக்கு, ராப்பத்து உற்சவம் நடைபெறும்.
பத்தாம் நாள் பெருமாள், ஆழ்வார் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறும். சாற்றுமறையை தொடர்ந்து, இறுதியாக நம்மாழ்வார் பெருமாள் திருவடியை தொழும் நிகழ்ச்சி (நம்மாழ்வார் மோட்சம்) நடைபெறும்.