சிப்காட் வாகன நிறுத்தத்தில் எடைமேடை தனியார் ஒப்பந்த நிறுவனம் அத்துமீறல்

ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் அருகே ஒரகடம் சிப்காட் தொழில் பூங்கா 3,500 ஏக்கரில் அமைந்துள்ளது. இங்கு, 180க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.

தொழிற்சாலைக்கு தேவையான மூலப்பொருட்கள் மற்றும் உற்பத்தி பொருட்களை ஏற்றிவரும் கனரக வாகனங்கள் நெடுஞ்சாலையில் நிறுத்துவதால், போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகள் ஏற்படுகின்றன.

இதனால், தொழிற்சாலைகளுக்கு வரும் கனரக வாகனங்களை நிறுத்த வடக்குப்பட்டு, வைப்பூர், மேட்டுப்பாளையம், பண்ருட்டி உள்ளிட்ட பகுதிகளில் சிப்காட் வாகன நிறுத்த முனையம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த வாகன நிறுத்த முனையங்களை, ‛ஜீரோ கிராவிட்டி' எனும் தனியார் நிறுவனத்திற்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் விடப்பட்டுள்ளது. இந்த நிலையில், வைப்பூரில் உள்ள வாகன நிறுத்த முனையத்தில், ஒப்பந்தம் எடுத்த தனியார் நிறுவனம், அந்த இடத்தில் கனரக வாகனங்களுக்கான எடை மேடையை அமைத்து வருகிறது.

வாகன நிறுத்தத்திற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டிய சிப்காட்டிற்கு சொந்தமான இடத்தில், தனியார் நிறுவனம் லாப நோக்கில், வேறு பயன்பாட்டிற்காக உபயோகிப்பது, சமூக ஆர்வலர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து ஒரகடம் சிப்காட் திட்ட அலுவலர் கார்த்திகேயன் கூறியதாவது:

சிப்காட்டிற்கு சொந்தமான இடத்தில் உள்ள வாகன நிறுத்த முனையத்தை, ஒப்பந்தம் எடுத்த தனியார் நிறுவனம், எந்தவித அனுமதியும் இன்றி, தன்னிச்சையாக வேறு பயன்பாட்டிற்கு எடைமேடை அமைக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

இதற்காக எந்த அனுமதியும் சிப்காட் நிர்வாகம் சார்பில் வழங்கவில்லை. தனியார் நிறுவனம் அத்துமீறி அங்கு எடைமேடை அமைத்துள்ளது. இதுகுறித்த புகாரின்படி, தற்போது அந்த இடத்தில் நடைபெற்று வந்த கட்டுமான பணிக நிறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து சிப்காட் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தனியார் ஒப்பந்த நிறுவனத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement